இந்தியா

'வயது, பாலினம், தொழில் முக்கியம் அல்ல!' - திஷா ரவி வழக்கு குறித்து அமித் ஷா கருத்து

webteam

திஷா ரவியின் 'டூல்கிட்' வழக்கு தொடர்பாக பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டெல்லி காவல்துறையின் நடவடிக்கையை நியாயப்படுத்தியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த 22 வயதான சூழலியல் செயற்பாட்டாளர் திஷா ரவி கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டார். விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் கிரெட்டா தன்பெர்க் சமூக வலைதளத்தில் பகிர்ந்த 'டூல்கிட்' அவரை தேசத் துரோக வழக்குப் பதியும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது. ஆனால், 'வழக்கை டெல்லி காவல்துறை ஒருதலைப்பட்சமாக கையாளுகிறது. சரியான ஆதாரம் இல்லை' என்பது போன்ற குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளன. இது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியிருக்கிறார். திஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்ததை நியாயப்படுத்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "குற்றத்தை மதிப்பிடுவதில் வயது, பாலினம் மற்றும் தொழில் ஆகியவை பொருந்தாது. வயது, பாலினம் அல்லது தொழில் அடிப்படையில் குற்றம் அல்லது குற்றவாளியை எவ்வாறு தீர்மானிக்க முடியும். காவல்துறை வழக்கின் சிறப்பை உன்னிப்பாக கையாளுகிறது.

இந்த வழக்கை விசாரிக்க, டெல்லி காவல்துறைக்கு முழுமையான சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. டெல்லி போலீஸ் இந்த வழக்கை நியாயமாக விசாரணை செய்து வருகிறது. அவர்கள் மீது எந்த அரசியல் அழுத்தமும் இல்லை. இந்த வழக்குக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குற்றம்சாட்டப்பட்டவர் நினைத்தால், அவர்களுக்கு நீதிமன்றங்களை அணுகுவதற்கான அத்தனை சாத்தியமும் இருக்கிறது.

22 வயது இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுத்ததற்கு சில ஆதாரங்கள் இருக்க வேண்டும். டெல்லி காவல்துறை சட்டப்படி செயல்படுகிறது. இந்த வழக்கில் பயன்படுத்தப்பட்ட ஐபிசி பிரிவுகளின் விவரங்களை ஏற்கனவே வழங்கியுள்ளது" என்று அமித் ஷா கூறியுள்ளார்.