இந்தியா

“மோடியுடன் சிஏஏ பற்றி விவாதித்தேன்; யாரும் பயப்படத் தேவையில்லை” - உத்தவ் தாக்கரே

webteam

நாடு தழுவிய அளவில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாகவும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராகவும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேபோல இந்தச் சட்டத்திருத்தத்தை ஆதரித்து நாடு தழுவிய அளவில் பேரணி நடந்து வருகிறது. இந்த விவகாரம் பற்றி சமீபத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் சிஏஏ செயல்படுத்தப்படும்’ என்று கூறியிருந்தார்.


இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. ஆனால் தேர்தலுக்குப் பின் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆகவே ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்தது.

இதனிடையே முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது என உத்தவ் தாக்ரே கூறியதால் சிவசேனே மற்றும் பாஜக இடையே கூட்டணி முறிந்தது. அதனையடுத்து பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறின. இறுதியில் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் உத்தவ் தாக்ரே முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பாஜக - சிவசேனா இடையேயான விரிசலுக்குப் பிறகு மீண்டும் பாஜக கட்சியை சேர்ந்த பிரதமர் மோடியை சந்தித்து உத்தவ் தாக்ரே உரையாடியுள்ளார். இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு அவர் சில விவரங்களை பகிர்ந்து கொண்டார். இது குறித்துப் பேசிய உத்தவ் தாக்ரே, “தேசிய குடிமக்கள் பதிவு (என்.ஆர்.சி) மூலம் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கும் தேவை இருக்காது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. எனவே குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ) குறித்துக் கவலைப்படத் தேவையில்லை” என்று அவர் கூறியுள்ளார்.