இந்தியா

தொழில்நுட்பத்தை திருடிவிட்டார் - ஏ.ஆர் ரஹ்மான் மீது இயக்குநர் பாபுகணேஷ் குற்றச்சாட்டு!

sharpana
தனது தொழில்நுட்பத்தை திருடிவிட்டதாக  ஏ.ஆர் ரஹ்மான் மீது இயக்குநர் பாபுகணேஷ் குற்றம் சாட்டியுள்ளார்
 நாகலிங்கம், நானே வருவேன், தேசிய பறவை உள்ளிட்டப் படங்களை இயக்கி தயாரித்தவர் நடிகர் பாபு கணேஷ். அந்தப் படங்களில் திரையரங்குகளில் உலகிலேயே முதன்முறையாக ’வாசனை’ முறையை அறிமுகப்படுத்தியவர், தற்போது இயக்கிவரும் ’காட்டுப்புறா’ படத்தினையும் இதே முறையில் இயக்கியுள்ளார். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இயக்கிவரும் ’லீ மஸ்க்’ திரைப்படத்தில், இதே உத்தியை கடைபிடித்து வருவதாகவும் உலகிலேயே முதன்முறையாக தான் மட்டும்தான் பயன்படுத்துவதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பாபு கணேஷ் குற்றம் சாட்டியுள்ளார். 
இதுகுறித்து அவர் பேசும்போது,
  “நான் 2000 ஆம் ஆண்டு செய்த கான்செப்ட் உலக அதிசயமாக பதிவாகியுள்ளது. ஆசியன் புக், இந்தியன் புக், யுனிவர்சல் புக் ஆகிய சாதனைகளையும் படைத்துள்ளது. இந்த கான்செப்ட்டை வைத்துதான் இசைமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் ‘லீ மஸ்க்’ ஆங்கிலப் படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். அவர் ஆங்கிலப் படத்திற்கு எனது தொழில்நுட்பத்தைப் பண்ணியது பெருமைதான். ஆனால், உலகத்திலேயே முதன்முறையாக நான்தான் பண்ணேன் என்று கூறுவது என்னுடைய உழைப்பை எடுத்துக்கொண்டதாகத்தான் அர்த்தம்.
அவருடைய உழைப்பை எடுத்துக்கொண்டால் அவரது மும்பை டீமை வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார். அதில், பலகோடி ரூபாய் பணமும் சம்பாதிக்கிறார். மூன்று மொழிகளில் தயாராகும் காட்டுப்புறா படத்தை நம்பித்தான் எனக்கு பைனான்சியர்கள் பணம் கொடுத்தார்கள். ஒரு ஆறுதலுக்காகவாவது என்னிடம் ஏ.ஆர் ரஹ்மான் பேசியிருக்கலாம். அதுவும் இல்லை. அதனால், அவருக்கு கான்செப்ட் திருட்டு என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்” என்று வேதனையோடு கூறும் பாபு கணேஷ், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்ட ஆர்டிகிள்  ’370’ பிரிவையே தலைப்பாகக் கொண்டு மற்றொரு படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.