திக்விஜய் சிங் pt web
இந்தியா

"பாஜக, RSSஸை பார்த்து தங்கள் கட்சி பாடம் கற்க வேண்டும்" - திக்விஜய் சிங் பேச்சால் சர்ச்சை

பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸை பார்த்து தங்கள் கட்சி பாடம் கற்க வேண்டும் என்ற ரீதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியது அக்கட்சியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

பாஜக, ஆர்எஸ்எஸ்-ஸை பார்த்து தங்கள் கட்சி பாடம் கற்க வேண்டும் என்ற ரீதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியது அக்கட்சியில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இது போல பேசி திக்விஜய் சிங் சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை அல்ல...

மத்திய பிரதேச மாநிலத்தில் ராஜகுடும்பத்தை சேர்ந்தவர் திக்விஜய் சிங். 38 வயதிலேயே மாநில காங்கிரஸ் தலைவராக உயர்ந்த இவர் முதல்வர், மக்களவை எம்.பி., மாநிலங்களவை எம். பி ஆகிய சிறப்புகளையும் பெற்றுள்ளார். 2019இல் புல்வாமாவில் நமது துணை ராணுவப் படையினர் பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகவில்லை என்றும் அது ஒரு விபத்து என்றும் திக்விஜய் சிங் கூறியிருந்தார். பாகிஸ்தானில் இந்திய படைகள் துல்லிய தாக்குதல் நடத்தியதா என்பதே சந்தேகம் எனவும் பேசினார். இதை சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்ட பாஜக, காங்கிரஸ் கட்சி நமது படைகளை அவமதித்துவிட்டது எனக் கூறியது. திக்விஜய் சிங்கின் கருத்துகள் தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என தள்ளிநின்று கொண்டது காங்கிரஸ்.

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட திக்விஜய் சிங்கின் பேச்சுகள் கட்சியை தர்மசங்கடத்தில் தள்ளிய சந்தர்ப்பங்கள் உண்டு. 2008இல் நடந்த பட்லா ஹவுஸ் என்கவுன்டர் போலியானது எனவும் நீதி விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என திக்விஜய் சிங் கூறியது மன்மோகன் சிங் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. 2010ல் உள்துறை அமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தை நக்சல் நடவடிக்கை விவகாரத்தில் திக்விஜய் சிங் விமர்சித்ததும் சர்ச்சையாக மாறியது. 78 வயதான மூத்த காங்கிரஸ் தலைவரான திக்விஜய் சிங் சர்ச்சை பேச்சுகளுக்காக தற்போது வரை பல வழக்குகளையும் சந்தித்து வருகிறார்