இந்தியா

"நான் முதலில் விவசாயி, அப்புறம்தான் போலீஸ்!" - விவசாயிகளுக்காக டி.ஐ.ஜி ராஜினாமா

"நான் முதலில் விவசாயி, அப்புறம்தான் போலீஸ்!" - விவசாயிகளுக்காக டி.ஐ.ஜி ராஜினாமா

Sinekadhara

விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தனது டி.ஐ.ஜி பணியை ராஜினாமா செய்கிறார் பஞ்சாப் அதிகாரி லக்மிந்தர் சிங் ஜக்கர்.

வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரும் `டெல்லி சலோ' விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி இருக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஏற்கெனவே பஞ்சாப் விளையாட்டு வீரர்கள் தங்கள் பதக்கங்களை திருப்பி கொடுக்க முன்வந்தனர். இப்போது அதேபோல் ஒரு முடிவை பஞ்சாப் மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருக்கும் லக்மிந்தர் சிங் ஜக்கர் எடுத்திருக்கிறார்.

"நான் அடிப்படையில் ஒரு விவசாயியின் மகன். இதில் நான் மிகுந்த பெருமை கொள்கிறேன். ஆனால் இப்போது போராடும் விவசாயிகளோடு நான் நிற்க வேண்டிய நேரமிது" எனக் கூறும் டி.ஐ.ஜி லக்மிந்தர் சிங், விவசாயிகளுடன் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக தனது பணியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை மாநில உள்துறை செயலாளருக்கு அனுப்பி இருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், "பண்ணைச் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் எனது விவசாயி சகோதரர்களோடு நானும் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும். உடனடியாக என்னை பணியில் இருந்து விடுவியுங்கள்" எனக் கூறி இருக்கிறார்.

இதனிடையே, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த லக்மிந்தர் சிங், "நான் முதலில் ஒரு விவசாயி, அதன்பின்னர் தான் ஒரு போலீஸ் அதிகாரி. எனக்கு இன்று எந்த பதவி கிடைத்தாலும், அதற்கு காரணம் எனது தந்தை வயல்களில் விவசாயியாக பணியாற்றி என்னை படிக்க வைத்ததனால்தான். எனவே, விவசாயத்திற்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

டெல்லியில் அமைதியாக பல நாட்களாக விவசாயிகள் தங்களின் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களின் குரல்களை யாரும் கேட்கவில்லை. நான் ஒழுங்குமிக்க ஒரு பணியில் இருக்கிறேன். இந்தப் பணியில் இருக்கும் விதிப்படி நான் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்க முடியாது. கலந்துகொள்ள முடியாது. இதனால் தான் முதலில் எனது பணி தொடர்பான முடிவை எடுக்க இருக்கிறேன்.

தற்போது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டேன். வழக்கமாக இது போன்று முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டும் என்றால் மூன்று மாதங்களுக்கு முன்பே நான் அரசுக்கு நோட்டீஸ் தரவேண்டும். உடனடியாக பதவி விலக வேண்டும் என்றால் அந்த 3 மாத ஊதியத்தை நான் அரசுக்கு திருப்பித் தரவேண்டும். இப்போது நான் உடனடியாக என்னை விடுவிக்க சொல்லி இருக்கிறேன். இதனால் அந்த 3 மாத ஊதியத்தை அரசுக்கு திருப்பிச் செலுத்த தயாராக இருக்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

32 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறையில் பணியாற்றிய லக்மிந்தர் சிங், 81 வயதான தனது தாயுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த ராஜினாமா முடிவை எடுத்து அதற்கான கடிதத்தை மாநில உள்துறை செயலாளருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ளார்.

லக்மிந்தர் சிங் மீதான ஊழல் சர்ச்சை!

ராணுவ அதிகாரியாக பணியாற்றிய லக்மிந்தர் சிங், 1994ல் பஞ்சாப் காவல்துறையில் டி.எஸ்.பி.யாக பணிக்குச் சேர்ந்தார். இந்த ஆண்டு மே மாதம் ரூ.10,000 ஊழல் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. இதில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட லக்மிந்தர் விசாரணையை எதிர்கொண்டு வந்தார். செப்டம்பரில் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டாலும், தொடர்ந்து வழக்கமான விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.

துறைசார் விசாரணை தற்போது நடைபெற்று வருகின்ற நிலையில்தான் தனது ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இது தொடர்பாக தி பிரின்ட் செய்தித் தளத்திடம் பேசியுள்ள லக்மிந்தர் சிங், "விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகத்தான் ராஜினாமா செக்கிறேன். எனது இடைநீக்கம் அல்லது மீண்டும் பணியமர்த்தலுடன் எந்த வகையிலும் எனது ராஜினாமாவுக்கு தொடர்பு கிடையாது. இவை முற்றிலும் தனித்தனி பிரச்சினைகள். இந்த ஆண்டு மே 9 அன்று நான் இடைநீக்கம் செய்யப்பட்டேன். எனக்கு எதிராக எழுத்துபூர்வ புகார் எதுவும் இல்லை என்றாலும் எனக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது. அந்த விசாரணை முடிந்த பிறகு செப்டம்பர் 14 அன்று நான் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டேன்.

ராணுவ பணி, போலீஸ் பணி தொடங்கி எனது சேவையின் 32 ஆண்டுகளில் எனக்கு எதிராக ஒரு புகாரும் வரவில்லை. நான் இடைநீக்கம் செய்யப்பட்டபோதுகூட இல்லை. ஆனால் நான் இப்போது அதற்குள் செல்ல விரும்பவில்லை. நான் ஒரு விவசாயியின் மகன் என்பதால் ராஜினாமா செய்தேன். எங்களுக்கு இன்னும் அபோஹரில் நிலம் உள்ளது. என் தந்தை அந்த நிலத்தில் பணிபுரிந்தார், அவர் சம்பாதித்ததிலிருந்து, அவர் என் கல்விக்கு பணம் கொடுத்தார். துரதிர்ஷ்டவசமாக நான் பல வருடங்களுக்கு முன்பு என் தந்தையை இழந்தேன், அதன் பிறகு நானும் என் அம்மாவும் எங்கள் விவசாய நிலங்களை கவனித்து வருகிறோம். 81 வயதில் கூட பயிர்களை கவனித்துக்கொள்கிறார்" என விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டு மட்டுமல்ல, 2012-ல் பாட்டியாலா சிறை கண்காணிப்பாளராக லக்மிந்தர் சிங் இருந்தபோது, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பல்வந்த் சிங் ராஜோனாவின் மரண தண்டனை தொடர்பான உத்தரவுகளை அவர் திருப்பி அனுப்பினார். பஞ்சாப் முன்னாள் முதல்வர் பீந்த் சிங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்தான் இந்த ராஜோனா. இந்த நடவடிக்கைக்கு அவமதிப்பு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார் லக்மிந்தர் சிங். இந்த விவகாரங்களால் அந்த காலகட்டங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.