இந்தியா

பெண்ணை ம.பி போலீஸார் இழுத்துச் சென்றனரா? வைரல் வீடியோவின் உண்மை நிலை என்ன?

PT

மத்தியப் பிரதேசத்தில் பெண் ஒருவரை, போலீஸார் இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா பகுதியில் உள்ள பாரி கா புரா கிராமத்தில் வசித்துவரும் சாஹேப் சிங் மீது, பணத் தகராறு தொடர்பாக அவருடைய சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சாஹேப் சிங் வீட்டுக்கு காவல் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அப்போது, வீட்டிற்குள் இருந்த சாஹேப் சிங்கை காவல்துறையினர் வெளியே அழைத்துள்ளனர். ஆனால், சாஹேப்பை அவருடைய தாய் வெளியில் அனுப்பாமல் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் இன்னும் இரண்டு ஆண்களும், பெண் ஒருவரும் போலீஸாரிடம் சண்டையிட்டுள்ளனர். மேலும், சாஹேப் சிங் அந்த இடத்தைவிட்டு தப்பிச் செல்வதற்கும் உதவியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அதாவது, சாஹேப் சிங்கின் தாய் காவல் துறை அதிகாரியின் கால்களைப் பிடித்துக் கொண்டதாகத் தெரிகிறது. அந்த நேரத்தில், சாஹேப் சிங் தப்பி ஓடியுள்ளார் எனத் தெரிகிறது.

இதுகுறித்து போலீஸார், “விசாரிப்பதற்காக நாங்கள் சென்றபோது அந்த நபரின் தாயார் எங்களிடம் சண்டையிட்டார். அந்த சமயத்தில் அந்த நபர் தப்பிச் சென்றுவிட்டார். இதுதொடர்பாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வீடியோவில் மேற்கண்ட உண்மைத்தன்மை தெரியாமல், அந்தப் பெண்ணை போலீஸார் இழுத்துச் செல்வதாகத் தெரிகிறது.
இந்த வீடியோ காட்சிதான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த ஜனவரி 3ஆம் தேதி நடைபெற்றதாகச் சொல்லப்படுகிறது.

- ஜெ.பிரகாஷ்