pm modi
pm modi ptweb
இந்தியா

’ரூ.15 லட்சம் கொடுப்போம்’ என்று சொன்னாரா மோடி? கட்கரி, அமித்ஷாவின் பேச்சும் காரணமா; நடந்தது என்ன?

Angeshwar G

”ரூ.15 ரூபாயாவது கொடுத்தாங்களா..?”.. பற்ற வைத்த முதல்வர் ஸ்டாலின்.. சூடுபிடித்த விவாதம்!

திமுக இல்லத்திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தால் சிலருக்கு எரிச்சல், ஆத்திரம், பொறாமை ஏற்பட்டிருக்கிறது. அதனால் வாய்க்கு வந்தபடி எல்லாம் விமர்சிக்கிறார்கள். இன்று இந்தியாவிற்கே ஆபத்து வந்துள்ளது. பேராபத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அறிவித்த உறுதி மொழிகளில் ஏதேனும் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளதா. வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணங்களை மீட்டுக்கொண்டு வந்து ஒரு நபருக்கு ரூ.15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்தார். 15 ஆயிரமாவது ரூ.15 ரூபாயாவது தந்துள்ளாரா. மாதம் 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என உறுதி மொழி தந்தார்” என பேசி இருந்தார்.

MK Stalin

”பேசியதற்கு ஆதாரத்தை காட்டுங்க.. இல்லைனா மன்னிப்பு கேளுங்கள்” - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கண்டனம்!

முதலமைச்சரின் இந்த கருத்துக்கு பாஜகவினர் தங்களது அதிருப்தியை தெரிவித்திருந்தனர். கோவை தெற்கு தொகுதியை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் முதலமைச்சர் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “ஜூன் 9-ம் தேதி திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பேசிய முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், “2014 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, 'வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால். ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ. 15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும்' என்றார். ஊழல் அரசியல்வாதிகளும், அவர்களின் பினாமி தொழிலதிபர்களும் பதுக்கிய பணத்தின் அளவை, மக்களுக்கு புரிய வைப்பதற்காக அவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஆனால், இந்த உண்மையை திட்டமிட்டு மறைத்து விட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார் என, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ஊழலில் திளைத்த, திளைக்கும் கட்சிகள் மக்களிடம் பொய்யை பரப்பி வருகின்றனர். 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்பும், இந்த கட்டுக்கதையை பரப்பி மக்களை ஏமாற்ற நினைத்தார்கள். ஆனால். மக்களிடம் அது எடுபடவில்லை. 2014-ல் 282 தொகுதிகளில் வென்ற பாஜக, 2019-ல் 303 தொகுதிகளில் வென்றது.

Vanathi srinivasan

ரூ. 15 லட்சம் தருவதாக பிரதமர் மோடி வாக்களித்தார் என முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர்கள், திமுக தலைவர்களும் தொடர்ந்து கட்டுக்கதையை பரப்பி வருகின்றனர். முதலமைச்சரின் மகனும் அமைச்சருமான உதயநிதியும் இந்த புரட்டை திரும்ப திரும்ப கூறி வருகிறார். முதலமைச்சர். அமைச்சர் போன்ற முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறி வருவது கடும் கண்டனத்திற்குரியது. இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வழங்குவேன் என பிரதமர் மோடி பேசியற்கான ஆதாரத்தை முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் வெளியிட வேண்டும். இல்லையெனில் தாங்கள் பேசியதற்கு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

எப்படியோ தமிழக அரசியலில் 15 லட்சம் ரூபாய் விவகாரம் தற்போது ஒரு புயலை கிளப்பி வருகிறது. உண்மையில் பிரதமர் மோடி தன்னுடைய பேச்சில் இந்த வாக்குறுதியை கொடுத்திருந்தாரா? இல்லை அவரது பேச்சு தவறுதலாக புரிந்து கொள்ளப்படுகிறதா என்பதை இங்கு பார்க்கலாம்.

2013 பரப்புரை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது என்ன?

2013 ஆம் ஆண்டு நவம்பர் அன்று சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள காங்கேர் பகுதியில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பேரணியில் நரேந்திர மோடி கலந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய பிரதமர், வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வந்தால் ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கும் ரூ.15 முதல் 20 லட்சம் வரை கொடுக்கலாம் என கூறியிருந்தார்.

pm modi

அவர் பேசுகையில், “இந்தியாவில் உள்ள அனைத்து மோசடி செய்பவர்களும் தங்கள் பணத்தை வெளிநாடுகளில் வங்கிகளில் டெபாசிட் செய்கிறார்கள் என்று உலகம் முழுவதும் கூறுகிறது. வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

”கறுப்புப் பணம் திரும்ப வர வேண்டுமா, வேண்டாமா?..” 

என் காங்கேரின் சகோதர சகோதரிகளே, சொல்லுங்கள், இந்த திருடப்பட்ட பணம். இந்த கறுப்புப் பணம் திரும்ப வர வேண்டுமா, வேண்டாமா?, இந்த ஊழல்வாதிகள் பதுக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு பைசாவையும் திரும்பப் பெறுவோமா?, இந்தப் பணத்தின் மீது பொதுமக்களுக்கு உரிமை இல்லையா?, இந்தப் பணம் பொதுமக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டாமா? ஒரு முறையாவது இந்த மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை, திரும்ப கொண்டு வந்தால், ஒவ்வொரு ஏழை இந்தியனுக்கும் 15 முதல் 20 லட்சம் ரூபாய் வரை இலவசமாகக் கிடைக்கும். அவ்வளவு பணம் இருக்கிறது” என்றார்.

வேறொரு கூட்டத்தில் அவர் பேசுகையில், “வெளிநாடுகளில் இருக்கும் கருப்புப் பணம் இந்தியாவில் உள்ள ஏழைகளுக்கு சொந்தமானது. நாங்கள் ஒரு முடிவுடன் இருக்கிறோம். வெளிநாடுகளில் உள்ள பணத்தை நிச்சயம் இந்தியாவிற்கு கொண்டு வருவோம். வருமானவரி செலுத்தக்கூடிய மாத சம்பளம் வாங்குபவர்கள் இந்தியாவிற்கு வரியாக செலுத்துகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து மீட்கும் கருப்புப் பணத்தை சரியாக வரி செலுத்தும் இந்தியர்களுக்கு மீண்டும் தருவேன்” என்றார். இந்த பிரச்சாரத்தில் ரூ.15 லட்சத்தை குறிப்பிட்டு எந்த ஒரு கருத்தையும் பிரதமர் மோடி பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

AmitShah

எவருக்கும் காசு கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரியும்...

அதேபோல் 2015 ஆம் ஆண்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “பாருங்கள், இது ஒரு ஜூம்லா. யாருடைய கணக்கிலும் 15 லட்சம் வரவு வைக்கப்படாது. அவர்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) இது தெரியும், உங்களுக்கும் தெரியும், நாட்டுக்கும் தெரியும். கருப்புப் பணத்தை மீட்டு கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும் என்பதே இதன் யோசனை. ஏழைகளின் நலனுக்காக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக திட்டங்கள் வகுக்கப்படும். எவருக்கும் காசு கிடைக்காது என்பது அனைவருக்கும் தெரியும். இது ஒரு சொற்பொழிவு...உருவகம். எந்த கறுப்பு பணம் திரும்ப வந்தாலும், ஏழைகளுக்கான திட்டங்களை உருவாக்க பயன்படும், இதைத்தான் அவர் (மோடி) சொல்ல விரும்பினார்” என்றார்.

ஆட்சிக்கு வர மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்

மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மராத்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு 2018 ஆம் ஆண்டு கொடுத்த பேட்டி ஒன்றில், “நாங்கள் ஆட்சிக்கு வர மாட்டோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். எனவே மிகப்பெரிய வாக்குறுதிகளை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டோம். ஆனால் இப்போது நாங்கள் ஆட்சியில் இருப்பதால், நாங்கள் அளித்த வாக்குறுதிகளை பொதுமக்கள் எங்களுக்கு நினைவூட்டுகிறார்கள், இருப்பினும், இந்த நாட்களில், நாங்கள் சிரித்துக்கொண்டே செல்கிறோம்” என்றார்.

Nitin gadkari

2018 ஆம் ஆண்டில் மராத்தி தொலைக்காட்சி ஒன்றில் இந்த பேட்டி ஒளிபரப்பானது. அப்போதே இந்த காணொளி காட்சியை வெளியிட்டு அதை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. அப்போதைய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, இந்த காணொளியை பகிர்ந்து தனது கருத்தையும் பதிவு செய்திருந்தார்.

அமித்ஷா மற்றும் நிதின் கட்கரியின் பேச்சுகள் பாஜக தரப்பில் அத்தகைய வாக்குறுதியை கொடுத்தது போன்ற எண்ணம் தோன்றுவதற்கு வழிவகுத்துள்ளது. அதேபோல், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே 2018 ஆம் ஆண்டில் தெரிவித்த கருத்தும் இந்த விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதாக அமைந்தது. ”மக்கள் மெல்ல மெல்ல 15 லட்சம் ரூபாயை பெறுவார்கள். மொத்தமாக உடனடியாக கொடுக்க அவ்வளவு பணம் இல்லை. ரிசர்வ் வங்கியிடம் பணம் கேட்டிருந்தோம். அவர்கள் அதற்கு இசைவு தெரிவிக்கவில்லை” என்று கூறியிருந்தார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் ரூ.15 லட்சம் குறித்து கேள்வி

முன்னதாக ரூ. 500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்து 18 நாட்கள் ஆன நிலையில் 2016 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி, மோகன் குமார் சர்மா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில விவரங்களை பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தார். பிரதமர் அளித்த வாக்குறுதியின் படி ரூ.15 லட்சம் பணம் எப்போது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளிக்க மறுத்த பிரதமர் அலுவலகம் இது தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்க முடியாது என்றும் கூறி இருந்தது. இதனை எதிர்த்து மோகன் குமார் தகவல் ஆணையத்திடம் முறையிட்டார். அதை பரிசீலித்த தகவல் ஆணையம் இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் அளித்த தகவல் ஏற்புடையது தான் என தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.