இந்தியா

அதிமுகவின் தர்மர் உள்ளிட்ட 27 பேர் மாநிலங்களவை எம்பி ஆக பதவியேற்பு!

ஜா. ஜாக்சன் சிங்

நாடு முழுவதும் அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இன்று எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு உட்பட ஒன்பது மாநிலங்களில் இருந்து 57 உறுப்பினர்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக இன்று 27 பேர் பதவியேற்றுக் கொண்டனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட 4 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழகத்தை பொறுத்தமவரை அதிமுகவின் பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஆர்.தர்மர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழ் மொழியில் பதவியேற்றார். இறுதியில் 'புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி ஜெயலலிதா வாழ்க' என தெரிவித்து தனது உரையை முடித்துக்கொண்டார். இதனைத்தொடர்ந்து, அங்கு கூடியிருந்த மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், தம்பிதுரை, ஜே.பி.நட்டா உள்ளிட்டோருக்கு வணக்கம் தெரிவித்து அவர் வாழ்த்துக்கள் பெற்றார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸின் ப.சிதம்பரம், அதிமுகவின் சி.வி.சண்முகம் மற்றும் திமுகவின் உறுப்பினர்கள் இன்று பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் பதவியேற்கவில்லை. வரும் 18-ஆம் தேதி காலையில் அவர்கள் பதவியேற்க உள்ளனர்.