இந்தியா

இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் ஆசையை நிறைவேற்றிய மலபார் கோல்டு நிறுவனம்

JustinDurai
மணப்பெண் தோற்றத்தில் முகம் முழுக்க புன்னகையுடனும் ஜொலிக்கும் தங்க நகைகளுடன் வலம்வந்த தன்யா சோஜனின் விளம்பர வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் தன்யா சோஜன் (வயது 21). கனடாவில் படித்து வரும் இந்த இளம்பெண்ணின் கனவு, மாடலிங் துறையில் கால்பதிக்க வேண்டும் என்பதே. ஆனால் தன்யா சோஜன் கனவில் பேரிடியாக விழுந்தது அவருடைய உடல்நலப் பாதிப்பு. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தன்யா சோஜனுக்கு இதய செயலிழப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவருடைய இதயம் அதன் திறனில் 20% மட்டுமே வேலை செய்தது.
இதய செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்களில் 50 சதவீத நோயாளிகள் 5 ஆண்டுகளுக்குள் இறக்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் தன்யா சோஜன் நம்பிக்கையுடன் சிகிச்சைப் பெற்று, தனது மனநிலையை சந்தோஷமாகவும், நேர்மறையான எண்ணங்களுடனும் வைத்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் சுறுசுறுப்பாகவும் பதிவிட்டு வருகிறார்.
பல மாத சிகிச்சைக்குப் பின் சமீபத்தில் கனடாவில் இருந்து கொச்சி திரும்பினார் தன்யா சோஜன். அப்போது வரும் வழியில் சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கண்ணைக்கவரும் நகை விளம்பர பேனர் ஒன்று தன்யா சோஜனின் கவனத்தை ஈர்த்தது. அந்த பேனரை செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, "நானும் இதுபோன்று நகைகள் அணிந்து போட்டோஷூட் எடுக்க விரும்புகிறேன். மலபார் கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ், உங்கள் ஆபரணங்களை அணிந்து, உங்களுக்காக ஒரு விளம்பரத்தில் நடிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வழங்க முடியுமா?'' எனப் பதிவிட்டிருந்தார். சில நாட்களுக்குப் பிறகு அவரது பதிவின் கமெண்டில் 'மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்' நிறுவனம் நடிக்க வருமாறு அழைப்பு விடுத்தது.
இதையடுத்து 'மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ்' நிறுவனத்தின் 'ப்ரைட்ஸ் ஆப் இந்தியர் 2021' விளம்பரத்தில் தன்யா சோஜன் தோன்றி நடித்தார். மணப்பெண் தோற்றத்தில் முகம் முழுக்க புன்னகையுடனும் ஜொலிக்கும் தங்க நகைகளுடன் வலம்வந்த தன்யா சோஜனின் விளம்பர வீடியோ அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நடிகைகள் கரீனா கபூர், தமன்னா உள்ளிட்டோர் அந்த வீடியோவினை பகிர்ந்து தன்யா சோஜனை பாராட்டினர்.