இந்தியா

டிஜிபி டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்புக்கு எதிரான மனு தள்ளுபடி

webteam

டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்ட பணி நீட்டிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது குட்கா முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளன என்றும் மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அவர் இரண்டாண்டு பணி நீட்டிப்பு பெற்றுள்ளார் எனவும் மதுரையைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

மேலும், கடந்த ஆண்டு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, டி.கே.ராஜேந்திரன் மீதான லஞ்ச புகார் குறித்த வருமான வரித்துறையின் கடிதம், கோப்புக்கள் கிடைக்கவில்லை என்றும் மறைக்கப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சசிகலாவின் அறையிலிருந்து எடுக்கப்பட்டவை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

எனவே டி.கே.ராஜேந்திரனின் பணி நீட்டிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐயின் சிறப்புப் புலனாய்வு பிரிவு அமைத்து, நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.