ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, தற்போது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.ஏ) ரூ.99 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த காலங்களில் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல், விமான இறக்கைகள் கீழே விழுவது, நடுவானில் விமானம் குலுங்குவது எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் இருந்தன.
குறிப்பாக, விமானங்களில் நிலவும் அலட்சியமற்ற சேவைகளால் பயணிகளுக்கு அசெளகரியங்கள் ஏற்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதில் அடிக்கடி ஏர் இந்தியா நிறுவனம் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, தற்போது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.ஏ) ரூ.99 லட்சம் அபராதம் விதித்துள்ளது. விமானப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், காலாவதியான அனுமதி சான்றிதழை வைத்துக்கொண்டு, ஏர்பஸ்ஏ 320 ரக விமானத்தை 8 முறை வணிக பயன்பாட்டிற்கு இயக்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்போது, ஏர்பஸ் A320 விமானம் அதன் ARC காலாவதியான போதிலும் டெல்லி, பெங்களூரு, மும்பை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட துறைகளில் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. சான்றிதழ் காலாவதியான பிறகும் விமானம் பல முறை பறக்கவிடப்பட்டதை ஒழுங்குமுறை ஆணையம் கண்டறிந்தது. இந்த மீறல் வழக்கமான நடைமுறையைவிட, அடிப்படை பாதுகாப்புத் தேவையை மீறுவதாகக் கருதப்பட்டது.
இந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மீது அதிருப்தி தெரிவித்துள்ள விமானப் போக்குவரத்து இயக்குநரகம், அலட்சியமாக செயல்பட்ட பொறியியல் துறை அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்கவும், 30 நாட்களுக்குள் அபராதத்தை செலுத்துமாறு, ஏர் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு பதிலளித்த ஏர் இந்தியா, இந்த சம்பவம் 2025ஆம் ஆண்டு தானாக முன்வந்து புகாரளிக்கப்பட்டதாகவும், மதிப்பாய்வின்போது அடையாளம் காணப்பட்ட இடைவெளிகள் பின்னர் நிவர்த்தி செய்யப்பட்டு ஒழுங்குமுறை ஆணையத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. எனினும், செயல்பாட்டு ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பின் உயர் தரங்களைப் பராமரிப்பதில் விமான நிறுவனம் தொடர்ந்து உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.