கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் மழைக்காலத்தில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் தரை இறங்கத் தடை விதித்து சிவில் விமான போக்குவரத்து துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது. மழைக்காலங்களில் மிகப்பெரிய அமைப்பு கொண்ட விமானங்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு விமான விபத்தை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னதாக வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கடந்த 7ஆம் தேதி கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கி போது ஏற்பட்ட விபத்தில் முதன்மை விமானி சாதே, துணை விமானி உள்பட 18 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை அடுத்து குறுகிய ஓடுபாதை கொண்ட இந்த விமான நிலையத்தில் மழைக் காலங்களில் நீளமான விமானங்கள் தரையிறங்குவதற்கு தடை விதித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.