செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
மகர நட்சத்திர தினமான ஜனவரி 14ம் தேதி மாலை பொன்னம்பல மேட்டில் "மகர ஜோதி" தரிசனம் நடைபெறுகிறது. வண்டிப்பெரியாறு அருகே சத்திரத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதியில் புல்லுமேட்டில் இருந்து திரளான பக்தர்கள் நடந்து சென்று மகர ஜோதியை தரிசனம் செய்வர்.
புல்லுமேட்டில் மகரஜோதியை தரிசித்த பின் பக்தர்கள் மீண்டும் சத்திரத்திற்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு சபரிமலைக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு புல்லுமேட்டில் இருந்து சபரிமலை செல்ல முயற்சிப்பவர்களைத் தடுக்க காவல்துறையும் வனத்துறையும் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளன.
வனவிலங்கு பாதைகளில் இரவுப் பயணம் எந்த சூழ்நிலையிலும் அனுமதிக்கப்படாது. மறுநாள் காலையில் மட்டுமே, புல்லுமேட்டில் இருந்து வழக்கமான பக்தர்களின் பயணம் அனுமதிக்கப்படும். சபரிமலையில் இருந்து புல்லுமேட்டுக்கு காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பயணிக்கலாம்.
பக்தர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஷ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.