இந்தியா

மேம்பாட்டு நிதி வசூல்: கணிசமாக உயரும் ரயில் கட்டணம்

kaleelrahman

ரயில் நிலைய மேம்பாட்டு நிதியாக 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூலிக்க முடிவு செய்யப் பட்டிருப்பதால் ரயில் கட்டணம் கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 50 க்கும் அதிகமான முக்கிய ரயில் நிலையங்களை தனியார் மற்றும் பொதுப் பங்களிப்புடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, விமான நிலையங்களைப் போல ரயில் நிலையங்களிலும் பயணிகளிடம் மேம்பாட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிப்போரிடம் டிக்கெட் கட்டணத்துடன் தலா 10 ரூபாய் கூடுதலாக பெற ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. குளிர்சாதன வசதி இல்லாத முன்பதிவுப் பெட்டிகளில் 2 ஆம் வகுப்பு இருக்கை மற்றும் படுக்கை வசதி பயணிகளிடமும் முதல் வகுப்பு பயணிகளிடமும் கட்டணத்துடன் 25 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட முன்பதிவுப் பெட்டிகளில் பயணிப்போருக்கு தலா 50 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகளுக்கு இந்த கட்டணம் பொருந்தும். அத்தகைய ரயில் நிலையத்தில் இறங்கும் பயணிகள் என்றால் மேம்பாட்டு நிதியாக பாதி கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு பயணி புறப்படும் இடமும் இறங்கும் இடமும் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்கள் என்றால் 1 புள்ளி 5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

உதாரணமாக 2 நிலையங்களுக்கும் தலா 50 ரூபாய் மேம்பாட்டு நிதி என்றால், அந்த நிலையங்களை பயன்படுத்தும் பயணி 100 ரூபாய்க்கு பதில் 75 ரூபாய் செலுத்த வேண்டும். இதுமட்டுமின்றி, மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையங்களில் நடைமேடை கட்டணத்துடன் கூடுதலாக 10 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் சீசன் டிக்கெட் வசதியை பயன்படுத்தும் பயணிகளுக்கு ரயில் நிலைய மேம்பாட்டுக் கட்டணம் கிடையாது.