இந்தியா

குர்மீத் ராம் ரஹீமுக்கு பஞ்சாபில் மட்டும் ரூ.58 கோடிக்கு சொத்து

குர்மீத் ராம் ரஹீமுக்கு பஞ்சாபில் மட்டும் ரூ.58 கோடிக்கு சொத்து

webteam

பஞ்சாப் மாநிலத்தில் தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ரூ.58 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

பாலியல் பலாத்கார வழக்கில் ‘தேரா சச்சா சவுதா’ தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் பயங்கர கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 30-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் சொத்துக்களையும் பெருமளவில் சேதப்படுத்தினர்.

கலவரம் தொடர்பான வழக்கு பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வன்முறையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஹரியானா அரசு தவறிவிட்டதாக கண்டனம் தெரிவித்தது. மேலும், பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான சொத்துகளின் விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.

இதனையடுத்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேரா சச்சா சவுதா அமைப்புகளுக்கு சொந்தமான இடங்களை கண்டறியும் பணியில் அம்மாநில அரசு அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் தேரா சச்சா சவுதா அமைப்புக்கு சொந்தமான ரூ.58 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் சில சொத்துகள் கண்டறியப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கக் கூடிய வகையில் மொத்தம் 51 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் 66 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.