விஜயா, தேனா மற்றும் பாங்க் ஆஃப் பரோடா வங்கிகள் இணைக்கப்பட உள்ளதாக நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
அரசுத்துறை வங்கிகளில் கடன்பெறும் தொழிலதிபர்கள் அதனை செலுத்தாமல் இருக்கும் வாராகடன் பிரச்னை நாட்டில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதேபோல், என்.பி.ஏ கடிதம் மூலம் அரசு வங்கிகளின் பெயரில் கடன் வாங்குபவர்கள் திருப்பி செலுத்தாத பிரச்னையும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. அதனால், நாட்டின் வங்கிகளின் கட்டமைப்பை சரிசெய்யும் பொருட்டு பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அதன் ஒரு பகுதியாக அரசுடைமை வங்கிகளை இணைக்கும் முயற்சிகளுக்கு நிதி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாக தற்போது, தேனா, விஜயா, பாங் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, நிதித்துறை செயலாளர் ராஜிவ் குமார் ஒன்றாக செய்தியாளரை சந்திக்கும் போது தெரிவித்தார்.
மூன்று வங்கிகளை இணைப்பதன் மூலம் வங்கிகள் வலுப்பெறுவதோடு, அவற்றினால் வழங்கப்படும் சேவைகளும் மேம்படும் என்று அருண் ஜெட்லி தெரிவித்தார். மூன்று வங்கிகள் இணைக்கப்படுவதன் மூலம் நாட்டின் மூன்றாவது பெரிய வங்கியாக அது மாறும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியுடன், ஸ்டேட் பேங்க் ஆப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கிகளும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி இணைக்கப்பட்டன. அதேபோல், 2013-ம்ஆண்டு தொடங்கப்பட்ட பாரதீய மகிளா வங்கியும் ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டது.