நேர்மையற்றவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
குஜராத் தேர்தலையொட்டி அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி பரபரப்பான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அவர் கடுமையாக சாடி வருகிறார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரகாஷ் ஜவடேகர் “50 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதிலும்,கருப்பு பணத்துக்கு எதிராக துணிச்சலான நடவடிகை எடுக்க காங்கிரஸ் தவறிவிட்டது. பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நவம்பர் 8ம் தேதியை கருப்பு பண எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க பாஜக முடிவு எடுத்து இருக்கிறது. அதே நாளை கருப்பு தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு செய்திருப்பது எனக்கு வியப்பு அளிக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு சாமானிய மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். நேர்மையற்றவர்கள் அந்த நடவடிக்கையினால் சிரமத்துக்கு ஆளானார்கள். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கிறது.” என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.