இந்தியா

திருப்பதி லட்டுக்கு திடீர் சிக்கல்

திருப்பதி லட்டுக்கு திடீர் சிக்கல்

webteam

லாரிகள் ஸ்டிரைக் காரணமாக திருப்பதியில், லட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

லாரிகளுக்கான காப்பீடு கட்டண உயர்வைத் திரும்பப்பெற கடந்த 30 ஆம் தேதி முதல், லாரிகள் ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது. கடந்த 9 நாட்களாக இந்த ஸ்டிரைக் நீடிப்பதால் திருப்பதிக்கு லட்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் வருகை தடைப்பட்டுள்ளது.

பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம், தினமும் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ஒரு நாளைக்கு லட்டு பிரசாதம் தயாரிக்க, 10 டன் நெய், 400 மூட்டை கடலைமாவு, முந்திரி, திராட்சை, ஏலக்காய், கற்கண்டு, சர்க்கரை போன்றவை தேவைப்படுகிறது.

இந்நிலையில், லட்டு தயாரிக்கும் மூலப்பொருட்கள் வருகை, லார்கள் ஸ்டிரைக்கால் தடை செய்யப்பட்டதால் லட்டுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால் திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் என தென்னிந்திய லாரிகள் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.