Modi & Vajpayee AI
இந்தியா

தொகுதி மறுவரையறை: வாஜ்பாய்- மோடி அணுகுமுறை

வாஜ்பாய் அரசின் காத்திருப்பு அணுகுமுறை vs மோடி அரசின் விரைவான முடிவுகள்

PT WEB

தொகுதி மறுவரையறை விவகாரத்தில், அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசு புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளுக்காகக் காத்திருந்தது; ஆனால், மோடி அரசு பழைய 2011ஆம் ஆண்டு மக்கள் தொகைத் தரவுகளைக் கொண்டு மசோதா கொண்டுவர முயல்வது விவாதமாக மாறியுள்ளது. பார்க்கலாம்!

atal bihari vajpayee

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதற்காக கடந்த 2003ஆம் ஆண்டில், வாஜ்பாய் அரசு 87ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தது. புதிதாக வெளியிடப்பட்ட மக்கள்தொகைத் தரவுகளின் அடிப்படையிலேயே மறுவரையறை இருக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்தின் அடிப்படையில், 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் வெளியாகும் வரை காத்திருக்க முடிவு செய்யப்பட்டது.

2004 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக இந்தப் பணிகளை முடிக்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்தபோதிலும், புதிய தரவுகளுக்காகக் காத்திருப்பதில் அரசு உறுதியாக இருந்தது. அப்போதைய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி முன்வைத்த வாதம், மாநிலங்களுக்கிடையிலான அரசியல் சமநிலையைக் குலைக்காமல், தொகுதி எல்லைகள் மற்றும் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை மட்டுமே புதிய தரவுகளின் அடிப்படையில் மாற்றியமைப்பதாக இருந்தது.

ஆனால், 2001 கணக்கெடுப்புத் தரவுகள் டிசம்பர் 31, 2003 அன்றுதான் வெளியாகின. 2004 மக்களவைக் கலைப்பு உள்ளிட்ட காரணங்களால், தொகுதி மறுவரையறை உத்தரவுகள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 2008ஆம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வந்தன. இதனால் 2004 பொதுத்தேர்தல் பழைய தொகுதி அமைப்பிலேயே நடைபெற்றது.

pm modi

இன்றைய சூழலில், புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள் வரும் வரை காத்திருக்காமல், 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளைப் பயன்படுத்த பிரதமர் மோடி அரசு முயல்வது விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அடுத்த பொதுத்தேர்தல் வரும்போது, இந்த 2011 தரவுகள் 18 ஆண்டுகள் பழமையானதாக மாறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.