மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதத் தொகுதிகள்வரை ஒரே விகிதத்தில் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்த சாதக பாதக விவாதங்கள் எழுந்துள்ளன.
மக்கள்தொகை மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுபரிசீலனை செய்வதே மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதாவாகும். குறிப்பாக, இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள மக்கள் எண்ணிக்கையை சமமாக இருக்கச் செய்வதாகும். இந்த செயல்முறை பொதுவாக மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பிறகு மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, மக்களவைத் தொகுதி எண்ணிக்கை 543இல் இருந்து 850ஆக அதிகரிக்கிறது. மக்களவைக்கு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் 815 பேருக்கு மிகாமலும், யூனியன் பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 35 பேருக்கு மிகாமலும் இருப்பார்கள் என்று இந்த மசோதா தெளிவுபடுத்துகிறது.
அதாவது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குச் சமமாக 50 விழுக்காடு அதிகரிக்கப்படும். இறுதி எண்ணிக்கை தொகுதி மறுவரையறை நடைமுறையின் மூலம் தீர்மானிக்கப்படும். இந்தத் தொகுதிகளைப் பிரிக்கும் பணியை ஒரு சக்திவாய்ந்த 'மறுவரையறை ஆணையம்' மேற்கொள்ளும். இந்தியாவில் கடைசியாக முழுமையான தொகுதி மறுவரையறை 2002ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, 2026க்கு பிறகு மீண்டும் மறுவரையறை செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில், மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதத் தொகுதிகள்வரை ஒரே விகிதத்தில் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்த சாதக பாதக விவாதங்கள் எழுந்துள்ளன.
மக்கள்தொகையைக் கணக்கில்கொள்ளாமல் ஒரே விகிதத்தில்அனைத்து மாநிலங்களுக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஒரே சதவீதத்தில் அதிகரிப்பது தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்குச் சாதகம் எனக் கருதப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால் பாதிக்கப்படும். மேலும், இந்த மறுவரைக்குப் பிறகு, அடுத்த 25 வருடங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படாது என உறுதியளிக்க மத்திய அரசு முன்வந்துள்ளது. ஆனால், இதுவரை மத்திய அரசு மசோதாவின் நகலை அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பகிரவில்லை. ஜனத்தொகை கணக்கெடுப்பு அடுத்த வருடம் நிறைவடைய உள்ளதால், இப்போது தொகுதிகள் மறுவரை நடைபெறாவிட்டால், பின்னர் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரை நடைபெறும் கட்டாயம் ஏற்படும் என மத்திய அமைச்சர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இது தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கு பாதகமாகக் கருதப்படுகிறது.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரை செய்யப்பட்டால், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகஉயரும் மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரை நடைபெற்றால், உத்தரப்பிரதேசம், பிஹார், மேற்கு வங்கம், ஜார்கண்ட், டெல்லி மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரிக்கும் சூழல் ஏற்படும். அனைத்து மாநிலங்களிலும் ஒரே விகிதாச்சாரத்தில் 50 சதவீதம் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டாலும், ஏற்கெனவே அதிக தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகரிக்கும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை பிற மாநிலங்களைவிட அதிகமாக இருக்கும்.
உதாரணத்துக்கு, தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் 40இல் இருந்து 60ஆக அதிகரிக்கும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 80லிருந்து 120 ஆக அதிகரிக்கும் மக்களவையில் 850 உறுப்பினர்கள் இருந்தால் எப்படி அனைவருக்கும் விவாதங்களில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வியும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள்மனதில் உள்ளது. இதுவும் தொகுதிகள் மறுவரையால் கட்சி வித்தியாசங்களை கடந்து ஏற்படும் பாதகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. மசோதாவின் முழு விவரங்கள் மத்திய அரசால் பகிர்பட்ட பிறகு சாதக பாதகங்களைச் சரியாக கணிக்க முடியும் என அரசியல் தலைவர்கள் கருதுகின்றனர்.