திஹார் சிறை எக்ஸ் தளம்
இந்தியா

மாற்றப்படும் திஹார் சிறை | டெல்லி பாஜக அரசு எடுத்த முடிவு.. பின்னணியில் 5 முக்கியக் காரணங்கள்!

டெல்லியில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசு, திஹார் சிறையை நகரின் வெளிப்புறத்துக்கு இடம் மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.

PT WEB

டெல்லியில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் பாஜக அரசு, திஹார் சிறையை நகரின் வெளிப்புறத்துக்கு இடம் மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதுதொடர்பாக கள ஆய்வு மேற்கொள்ள 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மிக முக்கியமான திஹார் சிறை இடமாற்றம் செய்யப்படுவதற்காக கூறப்படும் 5 காரணங்களைப் பார்க்கலாம்.

திஹார் சிறை

முதல் காரணம்

நிரம்பி வழியும் சிறைச்சாலை... இந்தியாவின் மிகப் பெரிய சிறை வளாகங்களில் ஒன்று திஹார் சிறைச்சாலை. 1958ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 400 ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் இந்த சிறைச்சாலையில் 5,200 கைதிகளை அடைக்கவே அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், தற்போது இங்கு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், திஹார் சிறை, கைதிகளால் நிரம்பி வழிகிறது. விளைவாக, கைதிகளை நிர்வகிப்பது சிறை நிர்வாகத்துக்கு சிரமமாக இருப்பதாகவும், அதீத கூட்டத்தால் கைதிகளின் நலமும் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இரண்டாவது காரணம்

பாதுகாப்பு... திஹார் சிறைச்சாலை மேற்கு டெல்லியில், குடியிருப்பு பகுதிகளை ஒட்டி அமைந்திருக்கிறது. இது கைதிகள் தப்பித்தல், கைதிகளுக்கு இடையிலான மோதல் என பாதுகாப்பு சார்ந்து நெருக்கடியாக அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மூன்றுவது காரணம்

நவீன வசதியின்மை... திஹார் சிறைச்சாலை 67 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்பதால், கைதிகளை கண்காணிக்க போதிய நவீன கட்டமைப்பும் அங்கு இல்லை என்று கூறுகின்றனர்.

திஹார் சிறை

நான்காவது காரணம்

கைதிகளுக்கு மறுவாழ்வு பயிற்சி வழங்க மேம்பட்ட கட்டமைப்பு தேவைப்படுகிறது. அந்த வசதி தற்போதுள்ள வளாகத்தில் குறைவாக உள்ளது என்று கூறுகின்றனர்.

ஐந்தாவது காரணம்

நகர மேம்பாடு... தற்போது திஹார் சிறை நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது. அந்த இடம் காலி செய்யப்பட்டால் நகர விரிவாக்கத்துக்கு பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தக் காரணங்களால், திஹார் சிறையை நகரின் வெளிப்புறத்துக்குக் கொண்டு சென்று நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மிகப் பெரும் சிறைவளாகத்தை உருவாக்க டெல்லி அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.