இந்தியா

டெலிவரி கொடுக்க லேட்டா வருவியா?: கத்தியால் குத்திய பெண் கம்பி எண்ணுகிறார்

டெலிவரி கொடுக்க லேட்டா வருவியா?: கத்தியால் குத்திய பெண் கம்பி எண்ணுகிறார்

webteam

காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த மார்ச் 21ஆம் தேதி இரவு 9 மணிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் சந்தர் விஹார் பகுதியில் உள்ள வாய்க்காலில் இளைஞர் ஒருவர் பலத்த காயங்களுடன் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் படுகாயங்களுடன் இருந்த வாலிபரை மீட்டு சஞ்சய் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பிய வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த வாலிபர் நிஹல் விஹார் பகுதியை சேர்ந்த கேசவ் (வயது 28) என்பது தெரியவந்தது. அவர் ஃப்ளிப் கார்ட்டில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 21ஆம் தேதி வழக்கம் போல் தனது பணி நிமித்தமாக சந்தர் விஹார் பகுதிக்கு வந்துள்ளார். அங்கு ஒரு பெண்மணிக்கு மொபைல் ஃபோன் டெலிவரி செய்ய சென்றுள்ளார். இந்தப் பகுதிக்கு இதற்கு முன்பு அவர் வந்ததில்லை என்பதால் வீட்டு முகவரி சரியாக அவருக்கு தெரியவில்லை. இது தொடர்பாக அந்தப் பெண்மணியிடம் மீண்டும் கேட்டுள்ளார், அவருக்கு முகவரியை தெரிவித்துள்ளார். இரவு நேரம் என்பதால் சரியாக தெரியாத காரணத்தில் அங்கும் இங்கும் அழைந்துள்ளார். இதற்கிடையில் அந்தப்பெண் தொடர்ந்து ஃபோன் செய்து வந்துள்ளார். ஒருவழியாக அந்த வீட்டு முகவரியை தெரிந்துக்கொண்ட கேசவ் டெலிவரி செய்ய சென்றுள்ளார்.

ஆர்டர் செய்த பொருள் வருவதற்கு காலத் தாமதமானதால் அந்தப் பெண் கேசவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பேச்சு முற்றி கைத்தகராறாக மாறியது. தனது வீட்டில் வைத்திருந்த கத்தியைக் கொண்டு டெலிவரி செய்ய வந்த கேசவை தாக்கியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலால் கேசவ் நிலைக்குலைந்து கீழே விழுந்துள்ளார்.அப்போது அந்தப் பெண்மணி கேசவின் மீது அமர்ந்துக்கொண்டு கத்தியால் தாக்கியுள்ளார். அப்போது அந்த வீட்டில் ஒரு ஆணும் உடனிருந்துள்ளார். அவர் வந்து தடுத்துள்ளார். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அப்பெண் அந்த நபரிடம்  “வீட்டை விட்டு உடனே வெளியேறு இல்லையென்றால் வந்து எனக்கு உதவு இவனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

அந்த நபரும் பின்னர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். கேசவ் மயக்கமடைந்ததையடுத்து அவரிடம் இருந்த ரொக்கம் ரூபாய் 40,000 மற்றும் டெலிவரி பொருட்களை எடுத்துக்கொண்டனர். பின்னர் கேசவை வீட்டில் இருந்து ஒரு வேன் மூலம் தூக்கி வந்து வாய்க்காலில் கிடத்தியுள்ளனர். பிறகு பொதுமக்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் அவரை காவல்துறையினர் மீட்டுள்ளனர். கேசவின் வாக்குமூலத்தை பெற்றக்கொண்ட காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். கேசவ் சொன்ன அடையாளத்தின் பேரில் அந்த வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அந்தப்பெண் வழக்கறிஞர் என்பதும் அவர் பெயர் கமல் தீப் என்பது தெரியவந்துள்ளது. அவரும் வேன் டிரைவரான அவரது சகோதர் ஜித்தேந்தர் சிங்கும் தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. முதலில் இந்தப் பெண் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். பின்னர் அவரது வீட்டிற்கு எதிரே இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கேசவ் அவரது வீட்டிற்கு டெலிவரி செய்ய சென்றதும் அதன்பின் அவர் வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கமல் தீப்பும் அவரது சகோதரரும் சேர்ந்து கேசவை தூக்கி வருவதும் பதிவாகி இருந்தது. பிறகு  ஜித்தேந்தர் சிங் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.இதனையடுத்து ரூ.40,000 ரொக்கம் மற்றும் பிற பொருட்கள் மீட்கப்பட்டது. மேலும் ஃப்ளிப் கார்ட் பேக், கத்தி,ரத்த கறை படிந்த டவல் போன்றவற்றை காவல்துறை பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது கொலை முயற்சி, வேண்டுமென்றே காயப்படுத்துவது, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  நிஹல் விஹார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.