இந்தியா

நடுங்க வைக்கும் குளிர், பனிமூட்டத்தால் தவிப்பு - டெல்லியில் விமானங்கள் தாமதம்

சங்கீதா

வட இந்தியாவில் வழக்கத்துக்கும் அதிகமான உறைய வைக்கும் குளிர் மற்றும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் தலைநகர் டெல்லியில் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இந்தியாவில் குளிர் காலமாக இருந்தாலும், வாட்டி வதைக்கும் குளிரால் வட இந்திய மக்கள் அவதிப்படுவது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், இந்த வருடம் அதிகளவிலான குளிர் அங்கு நிலவி வருகிறது. சொல்லப்போனால், ஜீரோ டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு டெல்லியின் பல இடங்கள் சென்றுள்ளது. குறிப்பாக சஃப்தர்ஜங் (1.9), பாலம் (5.2), லோதி சாலை (2.8), ரிட்ஜ் (2.2), அய நகர் (2.6) ஆகியப் பகுதிகளில் வெப்பநிலை குறைவாக உள்ளது.

மேலும், டெல்லியில் பனிமூட்டத்துடன், காற்று தரக் குறியீடும் 359 என்ற அளவில் மோசமடைந்து உள்ளது. இதனால் அங்கு அடர் பனிமூட்டம் சூழ்ந்ததுபோல் இருப்பதால், தெளிவற்ற வானிலை காணப்படுகிறது. இதனால் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் மட்டுமின்றி ரயில் மற்றும் விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளங்களில் அடர் பனிமூட்டம் காணப்படுவதால் உள்ளூர் விமானங்கள் புறப்படுதிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது.