இந்தியா

ரைம்ஸ் பாடி ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்

ரைம்ஸ் பாடி ஜாமீன் வழங்கிய டெல்லி நீதிமன்றம்

JustinDurai

கடந்த பிப்ரவரி 24 முதல் 26 வரையில் வடகிழக்கு டெல்லியில் நடந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் குழுக்களிடையே ஏற்பட்ட வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர்.  நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இந்த வன்முறையின்போது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ராகுல் என்பவர் காயமடைந்தார். தன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் என பாபு, சதீஷ், இம்ரான் என்ற மூவரை அடையாளம் கண்டு அவர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சமயத்தில் குற்றஞ்சாட்டிய ராகுல் தலைமறைவானார். அவர் அளித்த முகவரியை கொண்டு தேடியதில் அது போலி முகவரி என தெரியவந்தது.

எனினும் பாபு, சதீஷ், இம்ரான் ஆகியோர் மீது கலவர வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்கு டெல்லி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் சதீஷ், இம்ரான் ஆகியோர் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியேறினர். ஆனால் பாபுவிற்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் காவலில் வைக்கப்பட்டிருந்த பாபு மீண்டும் டெல்லி அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியிருந்தார். இதற்கிடையில் முன்பு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு தற்போது பாபு திருந்தி வாழ்ந்து வந்ததாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாக பாபு மீது போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் எனவே பாபுவிற்கு ஜாமீன் வழங்குவதில் தங்களுக்கு ஆட்சேபம் இல்லை என போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதையடுத்து கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத், குற்றஞ்சாட்டப்பட்ட பாபுவிற்கு ஜாமீன் பெறுவதற்கான தகுதிகள் இருப்பதாக அறிவித்தார். இருப்பினும், வழக்கின் உண்மைகள் குறித்த தனது அவதானிப்புகளை ஒரு கவிதை வடிவத்தில் பதிவு செய்தார்.

நீதிபதி அமிதாப் ராவத் கவிதை நடையில் வாசித்த அந்த ஜாமீன் தீர்ப்பு  பின்வருமாறு:

‘’தற்போதைய விண்ணப்பத்திற்கு தகுதிகள் உள்ளன, அதை வேறு வழியில் வைக்கிறேன்:

பாபு தனது ஜாமீனுக்காக மன்றாடுகிறார்;

கோடை காலம் கடந்துவிட்டது, குளிர்காலம் வந்துவிட்டது;

ஆனால் நீங்கள் செய்தது குற்றம், மற்றும் ராகுல் அழுதார்.

நான் ஒன்றல்ல, நான் ஒன்றல்ல;

குற்றச்சாட்டு மிகவும் கடுமையானது, பாசாங்கு செய்ய வேண்டாம்.

நான் யாரைத் தாக்கினேன், அவர் எங்கே இருக்கிறார்;

ஓ! எங்களுக்குத் தெரியும், விசாரணையில் நாம் பார்ப்போம்.

என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த கவிதை நீள்கிறது. இந்த கவிதையில் குற்றஞ்சாட்டி தலைமறைவான ராகுல், குற்றஞ்சாட்டப்பட்ட  பாபு, ஜாமீனில் சென்ற சதீஷ், இம்ரான் ஆகியோரை குறித்த அவதானிப்புகளை குறிப்பிட்டிருந்தார்.

இக்கவிதையை வாசித்ததும் பாபுவிற்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி அவரை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.