உமர் அப்துல்லா pt web
இந்தியா

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து.. தீவிரமாகும் குரல்கள்.. டெல்லியில் போராட்டம்!

மாநில அந்தஸ்து கோரிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.

PT WEB

மாநில அந்தஸ்து கோரிக்கையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளார் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. இதை வலியுறுத்தும் விதமாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 20 அன்று புதுடெல்லியில் பிரம்மாண்டமான 'டெல்லிசலோ' போராட்டத்தை அறிவித்திருக்கிறார். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட I-N-D-I-A கூட்டணிக் கட்சிகளையும் ஆம் ஆத்மி போன்ற பிற பாஜக எதிர்ப்புக் கட்சிகளையும் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர்

முன்னதாக,கோரிக்கைகளை வலியுறுத்தி ஜம்மு -காஷ்மீரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் உமர் அப்துல்லா கலந்துகொண்டார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டக் கூறு 370ஐ ரத்துசெய்த மத்திய அரசு ஜம்மு-காஷ்மீரை இரண்டு ஒன்றிய பிரதேசங்களாகவும் மாற்றியது. இதற்கெதிராகத் தொடரப்பட்ட வழக்கில், ஜம்மு-காஷ்மீரில் உடனடியாக சட்டமன்றத் தேர்தல் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேர்தல் நடந்து தேசிய மாநாட்டு கட்சி ஆட்சிப் பொறுப்பேற்று கிட்டத்தட்ட இரண்டுஆண்டுகள் ஆகப்போகின்றன. ஆனால் ’பொருத்தமான நேரத்தில்’ மாநிலஅந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்ற மத்திய பாஜக அரசின் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஏழாண்டுகள் ஆகியும் மோடி அரசு இதற்காக நடவடிக்கை எடுக்காத சூழலில்தான், "எங்களது பொறுமையைச் சோதிக்க வேண்டாம்; மாநில அந்தஸ்து எப்போது வழங்கப்படும் என்பதற்கான தெளிவான காலக்கெடுவை தெரிவியுங்கள்” என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் உமர் அப்துல்லா.

உமர் அப்துல்லா

காஷ்மீரை பொறுத்த அளவில் இது மிகத் தீவிரமான ஒரு விவகாரம். முதல்வராக இருந்தாலும், பெரும்பான்மை அதிகாரங்களைக் கையாளும் இடமாக ஆளுநர் மாளிகையே நீடிப்பதால் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித் தலைவரான உமர் அப்துல்லா. எனினும் மக்கள் கேட்கும் பல விஷயங்களை அவரால் செய்ய முடியவில்லை. இது உள்ளூர் சமூகத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது. இந்தப் பின்னணியிலேயே டெல்லியைப் போராட்டக் களம் ஆக்கியிருக்கிறார் உமர் அப்துல்லா.