இந்தியா

``சுவாசப்பிரச்னைக்கு வருவோர் எண்ணிக்கை, 50% உயர்வு”- டெல்லி மருத்துவர் சொன்ன பகீர் தகவல்

webteam

டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசம் என்ற பிரிவில் நீடிப்பதால், சுவாசக்கோளறு பாதிப்புக்கு ஆளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி காற்றின் ஒட்டுமொத்த தர குறியீடு 339 ஆக மிகமோசம் என்ற பிரிவில் நீட்டிப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லி ஐ.டி.ஓ. பகுதியில் காற்றின் தரக்குறியீடு 339 ஆகவும், மந்திர் மார்க் பகுதியில் 361 ஆகவும், லோதி ரோடு பகுதியில் 315 ஆகவும், நேரு நகரில் 368 ஆகவும் காற்றின் தரக்குறியீடு உள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி முழுவதும் முக்கிய இடங்களில் வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் பணி ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

டெல்லியில் காற்று தர குறியீடு மோசமடைந்துள்ள சூழலில், லேடி ஹார்டிங்கே மருத்துவமனை மற்றும் கலாவதி மருத்துவமனை ஆகியவற்றில் சுவாச கோளாறுகளால் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுபற்றி லேடி ஹார்டிங்கே மருத்துவமனையின் மருத்துவர் ஷாரதா கூறும்போது, “சரியான புள்ளி விவர தகவல் இல்லை. ஆனால், அவசர கால நிலை ஏற்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் நுரையீரல் தமனிகளின் பாதிப்பு நோயாளிகளிடையே அதிகரித்து உள்ளது. இதனால் அந்த அறிகுறிகளுடன் சேர கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை 40 முதல் 50 சதவீதம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு முன்பே வேறு சில சுவாச கோளாறுகளும் உள்ளன.

நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக உள்ளவர்கள் எளிதில் பாதிப்புக்கு இலக்காகி விடுகின்றனர். அவர்களுக்கு வேறு சுவாச பாதிப்புகளான இருமல், மார்பு வலி மற்றும் சுவாசிப்பதில் அதிக சிரமம் ஆகியவை காணப்படுகிறது. இதுவே தற்போது உள்ள நிலைமையாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது” என கூறியுள்ளார். சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர், டாக்டர் ரன்தீப் குலேரியா கூறும்போது, “புகையிலை உபயோகிப்பதில் ஏற்படும் பாதிப்புகளை விட காற்று மாசு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. சிகரெட் புகைப்பது, புகையிலையை தவிர்ப்பது பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால், அவற்றை விட காற்று மாசால் அதிக பாதிப்பு மற்றும் பிரச்னைகள் ஏற்படுகிறது” என அவர் கூறியுள்ளார்.