ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தாக்குதல் விவகாரத்தில் டெல்லி காவல்துறை நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என ஜேஎன்யு மாணவர் சங்கத் தலைவர் அய்ஷி கோஷ் வலியுறுத்தியுள்ளார்.
அவருடன் நமது டெல்லி செய்தியாளர் விக்னேஷ் முத்து நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.
கேள்வி 1: ஜே.என்.யூ-வில் அமைதி திரும்பிவிட்டதா?
பதில் 1: தற்போது சூழல் ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால் பழைய நிலை இன்னும் திரும்பவில்லை. மாணவர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டனர். தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நேரத்தில் மாணவர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து போராட வேண்டும். பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
கேள்வி 2: போராட்டத்தை தொடர்கிறீர்களா?
பதில் 2: ஆம். நாங்கள் போராட்டத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். உயர்த்தப்பட்ட விடுதி கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும் என்பதுடன், ஜே.என்.யூ துணை வேந்தரை பதவி நீக்கம் செய்யவேண்டும். அதைத்தான் மனிதவள மேம்பாட்டு துறையிடம் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். துணை வேந்தரை பதவிநீக்கம் செய்வது தொடர்பாக மனிதவள மேம்பாட்டுத்துறை பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும்.
கேள்வி 3: தாக்குதலில் இடதுசாரி மாணவர் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக டெல்லி காவல்துறையினர் கூறி இருக்கின்றனரே?
பதில் 3: டெல்லி காவல்துறையினர் ஒருசார்பாக நடந்து கொள்கின்றனர். அதனால் தான் வீடியோ ஆதாரங்களை காட்டுவதற்காக மாணவர் சங்கம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. எங்களிடமும் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட வீடியோக்கள் உள்ளன. அதில் சந்தேகப்படும் வகையில் எந்த இடதுசாரி மாணவர்களும் இல்லை. ஒரு வீடியோவில் நான் இருப்பதால், நான்தான் தாக்குதலில் ஈடுபட்டேன் என்று சந்தேகிக்க முடியாது. டெல்லி காவல்துறை ஒருசார்பாக நடந்துகொள்கிறது. அவர்கள் நேர்மையாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
கேள்வி 4: உங்களின் அடுத்த திட்டம் என்ன?
பதில் 4: திட்டம் என்னவென்றால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம். மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட இருக்கிறோம்.
கேள்வி 5: மனிதவள மேம்பாட்டுத்துறை ஏதேனும் உறுதி அளித்ததா?
பதில் 5: பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. துணை வேந்தரை பதவி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கொள்ளும் என நம்புகிறோம்.