இந்தியா

காதலியை கொடூர கொலைசெய்த அஃப்தாப் இன்று சாகேத் நீதிமன்றத்தில் ஆஜர் - டெல்லி காவல்துறை

webteam

தன் காதலி ஷ்ரத்தாவை கொடூரமாக கொலைசெய்த காதலன் அஃப்தாப் பூனாவாலா இன்று சாகேத் நீதிமன்றத்தில்  காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்படுவார் என்று டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு மே 18 ஆம் தேதி தன்னுடன் லிவ் - இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தாவைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு அஃப்தாப் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவர் நேரில் ஆஜர்படுத்தப்பட இருந்தார். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தாமதம் ஆகும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

உண்மை கண்டறியும் சோதனைக்காக அவரை ஆய்வகத்திற்கு அழைத்து சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் வாளுடன் வந்து காவல்துறை வாகனத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக குற்றவாளிக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்குமாறு திகார் சிறை நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் குற்றவாளி இன்று டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட நீதிபதி முன் காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக டிசம்பர் 1 ஆம் தேதி, அஃப்தாபிடம் நார்கோ சோதனை நடத்தப்பட்டது. அங்கு அவர் தனது காதலியைக் கொன்றதாக ஒப்புக்கொள்ளப்பட்டது. சோதனையின் போது, ஷ்ரத்தாவின் கொலையில் மறைக்கப்பட்ட உண்மைகளை ஒப்புகொண்டதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில், ஷ்ரத்தாவின் தந்தை விகாஸ் வாக்கர் இன்று மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.