டெல்லி
டெல்லி  ட்விட்டர்
இந்தியா

டெல்லி: தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.. எட்டி உதைத்த காவலர் சஸ்பெண்ட்.. வைரல் வீடியோ

Prakash J

டெல்லியில் இந்தர்லோக் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில், இன்று வெள்ளிக்கிழமையை அடுத்து, தொழுகைக்கு ஏராளமானோர் கூடிய நிலையில், மசூதிக்குள் இடநெருக்கடி ஏற்பட்டது. இதனால், இஸ்லாமியர்கள் சிலர் மசூதிக்கு வெளியே, அதாவது சாலையின் ஓரத்தில் மண்டியிட்டு 10-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகை செய்துகொண்டிருந்தனர்.

இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக்கொண்டிருந்தபோது அங்கு வந்த டெல்லி போலீஸார், கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இதுகுறித்த வீடியோ காட்சியில், காவலர் ஒருவர் முட்டிப்போட்டு தொழுது கொண்டிருந்தவர்களை எட்டி உதைத்து தாக்குகிறார். போலீஸாரின் இந்தச் செயல் அங்கிருந்தவர்களிடம் கோபத்தைத் தூண்டியது. உடனடியாக அவர்கள் போலீஸாரைச் சூழ்ந்துகொண்டு அவர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இணையத்தில் வைரலானது. பலரும் இதுகுறித்து தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

குறிப்பாக இந்த வீடியோவைப் பகிர்ந்து காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. இம்ரான் பிரதாப்கர்கி, "தொழுகையில் ஈடுபட்டிருப்பவர்களை டெல்லி போலீஸ் வீரர் எட்டி உதைப்பது மனித நேயத்தின் அடிப்படை பற்றிய புரிதல் இல்லாததைக் காட்டுகிறது. அந்த போலீஸ்காரரின் இதயத்தில் நிரம்பி இருப்பது என்ன மாதிரியான வெறுப்பு? டெல்லி போலீஸார் அந்த நபர் மீது வழக்குப்பதிந்து தகுந்த நடவடிக்கை எடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து பதில் அளித்துள்ள இணை ஆணையர் (வடக்கு) மீனா, "அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தப் போலீஸ் அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதனிடையே, இச்சம்பவத்தினை அடுத்து சட்ட ஒழுங்கமைதியை பாதுகாக்கும் வகையில் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.