டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிளின் மகள் ஒருவர் டெல்லி போலீசாருக்கு உணர்ச்சிபூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அதிகரிப்பதை தடுக்க, 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 23 ஆம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மக்கள் தேவையில்லாமல் வெளியே வரக் கூடாது என போலீசார் கடுமையான கெடுபிடிகளை கடைபிடித்து வருகின்றனர். காவலர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த நாட்களில் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால், வீடுகளில் தங்கியிருப்பவர்களைக் காட்டிலும் ஆபத்தான நிலையில் பணியாற்றி வருகின்றனர்.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணிக்கு மீண்டும் காணொலி மூலம் மக்களிடம் சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ளப்போவதாக நேற்று அறிவித்தார். அதன்படி இன்று பேசிய மோடி, “ஊரடங்கை மதித்து நடக்கும் நாட்டு மக்களுக்கு நன்றி, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி. இந்திய மக்கள் ஊரடங்கிற்கு உலகளவில் முன்னுதாரணமாகி இருக்கிறது. நாடே ஒன்றிணைந்து கொரோனாவுக்கு எதிராகப் போராடும் என்பதை மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடம் வீட்டின் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும். 9 நிமிடங்கள் விளக்கு ஏற்றும் போது, அமைதியாக இருந்து நாட்டு மக்களை குறித்து சிந்தியுங்கள். செல்போன் மூலமாகவும் 9 நிமிடங்கள் ஒளியேற்ற வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே விளையாட்டுத்துறையைச் சேர்ந்த சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் உள்ளிட்ட 40 பிரபலங்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கலந்துரையாடினார். அப்போது, கொரோனா பாதிப்பு குறித்து அவர் கேட்டறிந்ததார். இந்த கலந்துரையாடலில் பிவி சிந்து, ஹிமா தாஸ் உள்ளிட்ட முக்கியமான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். இந்த கலந்துரையாடலின் போது கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அவர்களிடம் பிரதமர் பேசியதாக தெரிகிறது.
இந்நிலையில், டெல்லி காவல்துறை தலைமை கான்ஸ்டபிளின் மகள் ஒருவர் டெல்லி போலீசாருக்கு உணர்ச்சிபூர்வமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஊரடங்கு உத்தரவு காலத்தில் மற்றவர்களுக்கு உதவுமாறு தனது கடிதத்தில் சிறுமி தனது தந்தையை ஊக்குவிக்கிறார்.
டெல்லி காவல்துறையில் தலைமை காவலராக இருப்பவர் அணில் குமார் தக்கா. இவரது மகள் விதி தக்கா. இவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். இவர் டெல்லி காவல்துறைக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்களுக்கு உதவியதற்காக தனது தந்தை மற்றும் அவரது சகாக்களுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். மேலும், “நீங்கள் இரவு தூங்குவது இல்லை. நீங்கள் உங்கள் வீட்டிற்கு தாமதமாகவே வருகிறீர்கள். சில நேரங்களில் வீட்டிற்கு வருவதே இல்லை. உங்கள் வாழ்க்கையைப்பற்றிக் கூட சிந்திக்காமல் மக்களுக்கு உதவுவதற்காக நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.