இந்தியா

டெல்லி வன்முறை: காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்

டெல்லி வன்முறை: காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ்

Sinekadhara

விவசாயிகள் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருக்கிறது.

காவல்துறை தலைவர் ஸ்ரீவஸ்தவா நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், டிராக்டர் பேரணி வன்முறையில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்றும், இது தொடர்பான தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்கட்டமாக டெல்லி வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றவர்களுக்கு டெல்லி காவல்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நபர் எந்தவொரு விமான நிலையத்திலும் அனுமதிக்கப்படமாட்டார் என்பதால், எஃப்.ஐ.ஆரில் பெயர் உள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும்படியாக காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பாஸ்போர்ட் உளிட்ட
ஆவணங்களையும் பறிமுதல் செய்யவும் டெல்லி காவல்துறை திட்டமிட்டுள்ளனர்.

ஏற்கெனவே விவசாய சங்கங்களுக்கு வன்முறை குறித்த விளக்கம்கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே அடுத்தடுத்த நாட்களில் டிராக்டர் பேரணியில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே தற்போது வீடியோ ஆதாரங்களை ஆராய்ந்து, இது திட்டமிடப்பட்ட வன்முறையா? அல்லது தற்காலிகமாக நடந்ததா? அல்லது இதன் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா? நிதியுதவி பெறப்பட்டதா? என்பதுபோன்ற அனைத்து தகவல்களையும் சேகரித்து, பின் அதுதொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.