இந்தியா

இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி

இயல்பு நிலைக்கு திரும்பும் வடகிழக்கு டெல்லி

jagadeesh

வன்முறை வெறியாட்‌டங்களா‌ல்‌ உருகுலைந்த டெல்லி, தற்போது மீண்டும் இயல்பு நிலைக்‌கு திரும்பியுள்ளது. அமைதிக்கு குந்தகம்‌ விளைவிக்க நினைக்கும் ‌நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி ‌கா‌‌வல்துறை எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்‌‌களாக வன்முறை‌கள்‌, உயிரி‌ழப்புகள் என போர்களமாய் மாறியிருந்தது வடகிழக்கு டெல்லி. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்‌ற ‌அதே இடத்தில் அச்சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடைபெற்றதே பிரச்னையின் தொடக்கப்புள்ளி. அப்போது இருதரப்பினருக்கும் இடையே ஏற்‌பட்ட மோதல் காட்டுத்தீயாய் பல்வேறு இடங்களுக்கு பரவி 45 உயிர்களை பறித்தது.

இந்த கோர நிலையை கட்டுக்குள்‌ கொண்டுவ‌ர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், வன்முறை நிகழ்ந்த பகுதிகள் அமைதியை காண தொடங்கியுள்ளன. பதற்றம் நிறைந்த பகுதிகள் அனைத்திலும் காவல்துறையி‌னர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை தொடர்பாக இதுவரை ‌2‌54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அமைதியை குலைக்கும் நோக்கில் தவறான தகவல்களை பரப்பியதாக 2 பேரை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியின் அனைத்து பகுதிகளும் கட்டுப்பாட்டில் இருப்பதால் வன்முறை நிகழ்வதாக வரும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என காவல்து‌றை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களை தீவிரமா‌க கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள டெல்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் ரந்தவா, தவறான தகவல்களை பரப்புவோர் மீதும் வெறுப்புணர்வை தூண்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.