இந்தியா

“நான் ஒரு எம்பி என கூறியும் டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை” - சி. அகாலிதளம் எம்பி

“நான் ஒரு எம்பி என கூறியும் டெல்லி போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை” - சி. அகாலிதளம் எம்பி

rajakannan

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக தனது புகாருக்கு டெல்லி போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிரோமணி அகாலிதளம் எம்பி நரேஷ் குஜ்ரால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக சிரோமணி அகாலி தளம் எம்பி நரேஷ் குஜ்ரால் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜ்ஜால் ஆகியோருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், வன்முறை சம்பவம் நிகழ்ந்து கொண்டிருந்த போது, உதவி கேட்டு டெல்லி போலீசாருக்கு தான் போன் செய்ததாகவும், ஆனால், போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதாவது, வன்முறை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக வீடு ஒன்றில் 16 இஸ்லாமியர்கள் தஞ்சம் அடைந்ததாகவும், ஆனால் அவர்களை தாக்க கும்பல் ஒன்று கதவினை உடைக்க முற்பட்டதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக புகார் அளித்த நிலையில், தான் ஒரு எம்பி என்று கூறியும் அதனை காவல்துறையினர் பொருட்படுத்தவில்லை என்று நரேஷ் குஜ்ரால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நரேஷ் குஜ்ரால் எம்பி எழுதியுள்ள கடிதத்தில், “நிலைமையின் தீவிரத்தன்மையை நான் எடுத்துரைத்தேன். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதையும் தெரிவித்தேன். என்னுடைய புகார் ஏற்றுக் கொண்டதாக இரவு 11.43 மணிக்கு தகவலும் வந்தது. ஆனால், என்னுடைய புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அறையில் பாதுக்காப்புக்காக ஒதுங்கிய 16 இஸ்லாமியர்களுக்கு எவ்வித உதவியும் கிடைக்கவில்லை. அங்கிருந்த இந்து மக்களே அந்த இஸ்லாமியர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்கள்” எனத் தெரிவித்துள்ளார்கள்.

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையில் நடைபெற்ற மோதலை அடுத்து நிகழ்ந்த மாபெரும் வன்முறை சம்பவத்தில், 38 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். ஏராளமான வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வன்முறையை டெல்லி போலீசார் தடுக்கவில்லை என பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வரிசையில் பாஜக உடன் கூட்டணியில் உள்ள அகாலிதளம் கட்சி எம்பி இந்தக் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.