jantar mantar protest  reuters
இந்தியா

இனி ஜந்தர் மந்தரில் போராட அனுமதியில்லை! - டெல்லி காவல் துறை அறிவிப்பு!

டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் இனி போராட அனுமதி வழங்கப்படாது என்று டெல்லி காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Rishan Vengai

ஜந்தர் மந்தரில் போராட்டங்களை தடைசெய்து, டெல்லி காவல் துறை புதிய இடங்களை அறிவித்துள்ளது. அரசியல் மற்றும் சமூக போராட்டங்களின் முக்கிய மையமாக இருந்த ஜந்தர் மந்தர், இனி போராட்டங்களுக்கு அனுமதிக்கப்படாது. புதிய நடவடிக்கைகள் டெல்லி நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நீட் முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலகக் கோரி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் நடத்தப்பட்ட மாணவர்கள் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் வெற்றி பெற்றது. அதன்காரணமாக தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். இந்தச் சம்பவம் முடிவடைந்த சில மாதங்களிலேயே, SIR என அழைக்கப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

delhi cjp protests

இதற்காக டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் கரப்பான ஜனதா பார்ட்டி சார்பில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு காவல்துறை அனுமதிவழங்காத சூழலில், போராட்டம் நடப்பதை தடுக்க 30 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோரை பாதுகாப்பிற்காக டெல்லியில் மத்திய அரசு நிறுத்தியது. அதுமட்டுமில்லாமல் முன்னெச்சரிக்கை காரணமாக அபிஜீத் திப்கே உள்ளிட்ட CJP தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மேலும் கூட்டம் கூடாமல் இருக்க பல அதிரடியான செயல்களில் போலீஸார் ஈடுபட்டனர். இதனால் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதி பரபரப்பாகவே காணப்பட்டது.

ஜந்தர் மந்தர்

இந்தசூழலில் தான் இனி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படாது என்றும், டெல்லியில் போராட்டங்களை நடத்த 3 புதிய இடங்களையும் அறிவித்துள்ளது காவல் துறை. அதன்படி இனி போராட்டம் நடத்துவதற்கு ராம்லீலா மைதானம், புராரி மைதானம், கிழக்கு டெல்லி சிபிடி மைதானத்தில் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், இனி ஜந்தர் மந்தரில் போராட்டத்திற்கு அனுமதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Jantar Mantar

1993-ல் போராட்டத்துக்கான அதிகாரபூர்வ இடமாக ஜந்தர் மந்தர் அறிவிக்கப்பட்டதிலிருந்து, விவசாயிகள் போராட்டம், ஆம் ஆத்மி இயக்கத்தின் போராட்டம், மாணவர்கள் போராட்டம் என போராட்டங்களை நடத்தக்கூடிய முக்கிய இடமாகவும், நீதிக்கான குரலெழுப்பும் இடமாகவும் ஜந்தர் மந்தர் விளங்கியது. நாடாளுமன்றம், நார்த் பிளாக், சவுத் பிளாக் போன்ற நாட்டின் முக்கிய அதிகார மையங்களை இணைக்கும் டெல்லியின் இதயப் பகுதியில் அமைந்திருப்பதே ஜந்தர் மந்தரின் பலமாக இருந்தது. இந்த இடம் அரசியல் மையத்தின் கவனத்தை எளிதாகப் பெற முடியும் வகையில் அமைந்திருந்தசூழலில் தற்போது இங்கு போராட்டத்திற்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.