இந்தியா

டெல்லி வன்முறை.. வாழ்வை இழந்து நடுத்தெருவில் நிற்கும் வயதான தம்பதியரின் பரிதாப நிலை..!

டெல்லி வன்முறை.. வாழ்வை இழந்து நடுத்தெருவில் நிற்கும் வயதான தம்பதியரின் பரிதாப நிலை..!

webteam

டெல்லியின் வன்முறை வெறியாட்டங்களில் வாழ்வை இழந்த ஒரு வயதான தம்பதியின் நிலை அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

டெல்லியில் நிகழ்ந்த வன்முறை பலரது வாழ்வையும் பாதித்துள்ளது. அதில் ஒருவர்தான் நடைபாதை வியாபாரி மகிந்தர். இவர், டெல்லியில் உள்ள சிவ் விஹார் பகுதியில் ஒரு சிறிய வீட்டில் தனது 64 வயது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். வடகிழக்கு டெல்லியில் சில இடங்களில் கலவரம் தொடங்கியதும் தனது வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர் மகிந்தர் தம்பதி.

இதனையடுத்து கலவரம் அடங்கிய பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் கலவரத்தில் அவர்களது இல்லம் முழுவதும் தீக்கிரையாகி இருந்தது. இதனால் தற்போது மாற்று உடை கூட இல்லாமல் தெருவில் நிற்கின்றனர்.

வீட்டை இழந்த மகிந்தர் பேசியபோது “செய்வதறியாது திகைத்து நிற்கிறேன். எனக்கு வயது 70. எனது மனைவிக்கு வயது 64. இனிமேல் நாங்கள் வேலைக்குச் செல்லவா முடியும்? பொருள்களை எல்லாம் கொள்ளையடித்துவிட்டு வீட்டை தீக்கிரையாக்கிச் சென்றுள்ளனர். எனக்கு இருந்தது இந்தவீடு மட்டும்தான். இதை யார் மீட்டுத் தருவார்கள். பீரோக்களை உடைத்து அதில் இருந்த பொருட்களை அள்ளிச் சென்ற கொள்ளைக்காரர்கள் அப்படியே விட்டுவிட்டாவது போயிருக்கலாம். எதற்காக தீ வைத்தார்கள்..? நாங்கள் செய்த பாவம் என்ன..? தற்போது தங்குவதற்கு இடமில்லாமல் அருகில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறோம்” என்றார்.

மகிந்தரின் மனைவி கமலேஷ் பேசியபோது “எல்லாம் அழிந்து விட்டது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள்தான் என்னை காப்பாற்றினார்கள். எங்களது எல்லா பணமும் போய்விட்டது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாவற்றையும் கொள்ளை அடித்துவிட்டனர். வீடு முழுவதையும் தீ வைத்து கொளுத்தி விட்டனர்” என்றார்.

இந்த தீச் சம்பவத்தில் மகிந்தர் கமலேஷ் தம்பதியின் “வீட்டுப் பத்திரம், ஆதார் அட்டை‌, வாக்காளர் அட்டை, மருந்துச் சீட்டுகள், இன்சூரன்ஸ் ஆவணங்கள் ஆகிய அனைத்தும் அழிந்து விட்டன. அரசாங்கத்திடமிருந்து வந்து கேட்டால் நாங்கள்தான் இந்த வீட்டின் உரிமையாளர்கள் என சொல்லிக் கொள்வதற்கு கூட ஒரு அடையாள அட்டை கூட இல்லாமல் தவித்து நிற்கின்றனர் இந்த தம்பதி.