டெல்லியைச் சேர்ந்த ஆய்வு மாணவர் ஒருவர் மலை ஏற்றத்தின் போது தவறி விழுந்து உயிரிழந்தார்.
தேசிய சமூக அறிவியல் ஆய்வு அமைப்பில் ஆராய்ச்சி மாணவரான பிரவீன் திவாரி என்பவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்று வந்தார். மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் திவாரி, கடந்த 30ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மலைக்குன்றில் ஏறினார். சுமார் 30 அடி உயரத்துக்கு சென்ற அவர், தொடர்ந்து மேலே ஏற முயன்றார். கைகள் வலுவிலக்க, சற்று களைப்புடன் ஏற முன்ற அவர், திடீரென கால் இடறி விழுந்தார்.
இதில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் 3 நாட்களாக அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் பிரவீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் எதற்காக அந்த மலையில் ஏறினார் என இதுவரை தெரியவரவில்லை. பிரவீன் திவாரி மலை மீது ஏறிய போது, அவரது நண்பர் எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாதுகாப்பின்றி மலையேறுவது பெரும் விபரீதமாய் அமையும் என மலையேற்ற ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.