delhi jantar mantar reuters
இந்தியா

1993 முதல் 2026 வரை | நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த போராட்டங்கள்.. முடிவுக்கு வந்த ஜந்தர்மந்தர்!

நீட்-யுஜி வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக போராட்டம் வெடித்தது. இப்போராட்டம் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.

Prakash J

டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் முதன்மை இடமாக விளங்கிய ஜந்தர் மந்தர் பகுதிக்குப் பதிலாக, டெல்லி காவல் துறை மற்றும் நிர்வாகம் சார்பில் 3 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதேநேரத்தில், இனி ஜந்தர் மந்தரில் பெரிய அளவிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதி, போராட்டக் களங்களுக்குப் பெயர் பெற்றவை. அங்கு தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்குப் பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி இந்தப் பகுதியில் போராட்டங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, மாற்று இடங்கள் அடையாளம் காணப்பட்டன. அதன்படி, ராம்லீலா மைதானம், நிரங்காரி சமாஜ மைதானம், புராடி, பவானா மைதானம் உள்ளிட்ட 3 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ராம்லீலா மைதானம் முதன்மையான பகுதியாகக் கருதப்படுகிறது. எனினும், இப்பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தப்படுவதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இனி ஜந்தர் மந்தரில் பெரிய அளவிலான போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் இதுவரை நடைபெற்ற பெரிய போராட்டங்கள் குறித்த காலவரிசையைக் காணலாம்.

anna hazare jantar mantar protest

1993 : அப்போதைய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக 33 அமைப்புகள் 'சிறை நிரப்புங்கள்' என்ற போராட்டத்தை நடத்தின.

2011 : ஊழலைச் சமாளிக்க வலுவான ஜன லோக்பால் மசோதாவைக் கோரி சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஐந்து நாள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். இந்தப் போராட்டம் அக்காலகட்டத்தின் மிக முக்கியமான மக்கள் இயக்கங்களில் ஒன்றாக உருவெடுத்தது.

2012 : டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என அறியப்பட்ட பெண் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதி கோரியும் பெண்களைப் பாதுகாக்க வலுவான சட்டங்களைக் கோரியும் இங்கு போராட்டம் வெடித்தது.

2014 : அருணாச்சலைச் சேர்ந்த மாணவி நிடோ டானியாவின் மரணத்தைத் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன. டெல்லியில் நடைபெற்ற இந்தச் சம்பவம், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு எதிரான இனப் பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிராகத் திரும்பியது.

2017 : கடன், வறட்சியால் ஏற்பட்ட இழப்புகளிலிருந்து நிவாரணம் கோரி, தமிழக விவசாயிகள் 41 நாட்கள் போராட்டம் நடத்தினர்.

Wrestlers protest

2023 : மல்யுத்த வீரர்கள், அப்போதைய இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரன் சிங்குக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ​​வீராங்கனைகளை அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டதுடன், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தனர்.

2024 : நீட்-யுஜி (NEET-UG) வினாத்தாள் கசிவு மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டதில் முறைகேடுகள் தொடர்பாக போராட்டம் நடைபெற்றது.

2026 : மற்றொரு நீட்-யுஜி வினாத்தாள் கசிவு சர்ச்சை தொடர்பாக போராட்டம் வெடித்தது. இப்போராட்டம் காரணமாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார்.