இந்தியா

உலகில் அதிக மாசடைந்த நகரமாக இருக்கும் தலைநகரம் டெல்லி.! காரணம் என்ன?

webteam

உலகில் அதிகம் மாசு நிறைந்த நகரங்களின் பட்டியலில் எப்பொழுதுமே முதல் இடத்தில் இருக்கும் நகரமாக தலைநகர் டெல்லியே இருந்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன? இதனால் டெல்லி மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? மாசுபாட்டை குறைக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? விரிவாக தெரிந்துகொள்வோம்.

ஒவ்வொரு வருடத்திலும் பெரும்பாலான நாட்கள் காற்றின் தர குறியீடு மிக மோசமாகவே இருக்கும் நகரமாகத்தான் நமது தலைநகரம் டெல்லி இருந்து வருகிறது. கொரோனாவிற்கு பிறகுதான் முகக் கவசம் அணிவது என்பது மிகச் சாதாரண நடவடிக்கையாக மாறியது. ஆனால் தலைநகர் டெல்லியில் பல ஆண்டுகளாகவே காற்று மாசிலிருந்து தப்பித்துக்கொள்ள முகக்கவசம் அணிவதை டெல்லி மக்கள் வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி டெல்லிதான் உலகில் அதிகம் மாசு நிறைந்த நகரங்களில் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான காரணங்கள் என்று பார்த்தால் டெல்லியின் அண்டை மாநிலங்களான ஹரியானா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகியவற்றில் எரிக்கப்படும் பயிர்க் கழிவுகள் முக்கிய பங்கு பெறுகின்றன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்திருந்தபோதும் உண்மையில் இந்த விவகாரத்தில் மாநில அரசுகளால் எந்த ஒரு முடிவிற்கும் வர முடியாமல் திணறிதான் வருகின்றன.

டெல்லி அரசாங்கத்தின் சார்பில் உயிரியல் முறையில் பயிர்க் கழிவுகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கான திட்டங்கள் கொண்டுவரப்பட்டு அது ஆரம்பக்கட்ட செயல்பாட்டில் இருக்கின்றது. தற்போது டெல்லியிலும் பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது என்பதால் இந்த ஆண்டு ஓரளவிற்கு இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படும் என நம்பப்படுகிறது.

காற்று மாசிற்கு மற்றொரு முக்கிய பிரச்சனை என்றால் அது அதிக அளவிலான வாகன பயன்பாடுகள் தான். டெல்லியில் சுமார் 82 லட்சம் இருசக்கர வாகனங்களையும் சேர்த்து மொத்தமாய் 1.3 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் டெல்லி சாலைகளில் பயணிக்கின்றன.

டெல்லியில் வாகன பயன்பாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. அதில் டீசல் ஓடும் கார் உள்ளிட்ட வாகனங்களை பத்து ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும், பெட்ரோல் சி என் ஜி பயன்படுத்தும் கார்கள் 15 ஆண்டுகள் வரையிலும், இருசக்கர வாகனங்களை 15 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. அதே நேரத்தில் குறிப்பிட்ட திறனுக்கு அதிகமான வாகனங்களும் டெல்லிக்குள் நுழைய அனுமதி இல்லை. கனரக வாகனங்களுக்கும் கடுமையான நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை அமலில் உள்ளன.

மற்றொரு பிரதான பிரச்னை சட்டவிரோத கட்டுமானங்கள். இதனை தடுக்க கட்டுமானங்களை அமைக்க உரிய அனுமதி பெற வேண்டும். கட்டுமானங்கள் மேற்கொள்ளும்போது பச்சை நிறத்திலான துணி கொண்டு முழுவதும் மூடப்பட வேண்டும் மற்றும் மணல், சிமெண்ட் உள்ளிட்டவை பறக்காத வண்ணம் முழுமையாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்னும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

அதேபோல சாலை உள்ளிட்டவை அமைக்கப்படும்போது, தொடர்ந்து நீர் தெளித்து தூசியில்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் விரிவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புதிய கட்டடங்கள் எழுப்பப்பட வேண்டும் என்றால் மரங்கள் அகற்றுவதற்கு கடுமையான விதிமுறைகளும், அகற்றப்படும் மரங்கள் எண்ணிக்கைக்கு பல மடங்கு அதிகமாக புதிய மரக்கன்றுகளை நட வேண்டும், குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகள் அமைக்கப்படும் பொழுது 30 சதவீதத்திற்கும் அதிகமான இடம் பசுமையை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும் என்ற பல விதிமுறைகள் உள்ளன.

தொடர்ந்து தலைநகர் டெல்லியில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போது, காற்று மாசுபாட்டை மனதில் கொண்டு பட்டாசு வெடிக்க தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அமலில் இருந்து வருகிறது. குப்பைகளை எரிப்பதற்கு கடுமையான தடை உள்ள சூழலில் குப்பைகளை பாதுகாப்பான முறையில் அகற்றுவதற்கும் தொழில்நுட்ப ரீதியில் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றது.

இத்தனை கட்டுபாடுகளும், நடைமுறைகளும் அமலில் இருந்தாலும், டெல்லியில் தொடர்ந்து காற்று மாசுபாடு அதிகரித்த வண்ணம் தான் இருக்கிறது. இருக்கக்கூடிய விதிமுறைகள் தெளிவாக இருந்தாலும் அதை பொதுமக்கள் பல நேரங்களில் மீறுவதும் விதிமுறைகளை கட்டி காக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனத்துடன் செயல்படுவதுமே இவற்றுக்கான காரணங்களாக சொல்லப்படுகின்றன.