டெல்லி கட்டட விபத்தில் மீட்புப் பணிகள் Reuters
இந்தியா

நாடு முழுதும் பேசுபொருளான டெல்லி தனியார் விடுதி விபத்து.. மற்ற விடுதிகளுக்கும் ஆபத்து?

டெல்லியில் தனியார் மாணவர் விடுதி இடிந்து விழுந்த அதிர்ச்சி விலகும் முன், சத்யா நிகேதன் பகுதியில் உள்ள மற்ற விடுதிகளும் எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என பகீர் புகார் எழுந்துள்ளது. என்ன காரணம்? பெருஞ்செய்தி பகுதியில் பார்க்கலாம்.

PT WEB

டெல்லி பல்கலைக்கழகத்தில் 1 லட்சத்து 32 ஆயிரம் மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். அதில் 44 ஆயிரம் மாணவர்கள் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். ஆனால் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில், வெறும் 10 ஆயிரம் பேருக்கு மட்டும்தான் தங்குமிட வசதி உள்ளது. இதனால் மீதமுள்ள 34 ஆயிரம் மாணவர்களும் வலுக்கட்டாயமாக தனியார் விடுதிகளை நோக்கித் தள்ளப்படுகின்றனர்.

டெல்லி கட்டட விபத்து

பல்கலைக்கழகத்துக்கு அருகிலேயே தங்கவேண்டிய கட்டாயம் இருப்பதால் மாணவர்களின் தேவையை பயன்படுத்தி தனியார் விடுதிகள் கட்டணம் என்ற பெயரில் கல்லா கட்டுகின்றன. கொள்ளை லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, மாதத்துக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வாடகை வசூலிக்கும் இந்த விடுதிகளில், அதற்கேற்ற எந்த அடிப்படை வசதியும் இருப்பதில்லை. பழுதடைந்த கட்டடம், மோசமான உணவு போன்ற பிரச்சினைகள் பெரும்பாலான விடுதிகளில் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

நடவடிக்கை எடுக்கவேண்டிய அதிகாரிகள் பெயருக்கு மட்டும் ஆய்வு செய்துவிட்டு, பாக்கெட்டுகள் நிரம்பியதும் கண்டும் காணாமல் சென்றுவிடுவதாக மாணவர்கள் குமுறுகின்றனர். நாட்டின் எதிர்காலமாகத் திகழும் மாணவர்களுக்கு தலைநகரிலேயே இந்தநிலை உள்ளது என்பதுதான் பலரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.