delhi rain
delhi rain ani
இந்தியா

"24 மணி நேரத்தில் 153 மி.மீ".. டெல்லி மக்களை 41 ஆண்டுகளுக்குப் பிறகு அலறவிடும் அதி கனமழை!

Prakash J

டெல்லி உள்ளிட்ட வடஇந்தியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. டெல்லியில், கடந்த 1958ஆம் ஆண்டுக்குப் பிறகான 3வது அதிகபட்ச கனமழை இதுவாகும். 1958 ஜூலை 20-21 ஆகிய தேதிகளில் 266.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதுதான் டெல்லியில் பெய்த அதிகபட்ச கனமழையாக கருதப்படுகிறது. அதற்கடுத்ததாக, 1982ஆம் ஆண்டு ஜூலை 25-26 ஆகிய தேதிகளில் 169.9 மில்லி மீட்டர் பெய்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, டெல்லியில் பெய்த 2வது அதிகபட்ச கனமழையாகக் கருதப்படுகிறது.

டெல்லி மழை

இதன்தொடர்ச்சியாக, நேற்றும் (ஜூலை 8) இன்று (ஜூலை 9) காலை வரையுமான 24 மணி நேரத்தில் பெய்த 153 மில்லி மீட்டர் மழை, 3வது அதிகபட்ச மழைப்பொழிவாகக் கருதப்படுகிறது. இதன்மூலம், 41 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அதிக கனமழை பதிவாகி இருக்கிறது. 2003ஆம் ஆண்டு ஜூலை 9-10 ஆகிய தேதிகளில் பெய்த மழையும் (133.4 மில்லி மீட்டர்), 2009ஆம் ஆண்டு ஜூலை 27-28 ஆகிய தேதிகளில் பெய்த மழையும் (126 மில்லி மீட்டர்) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்த கனமழை காரணமாக டெல்லியின் பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பல சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இன்றும் தொடர்ந்து கனமழை பொழிவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி இருப்பதோடு, சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

delhi rain

டெல்லி மற்றும் என்சிஆர், யமுனாநகர், குருஷேத்ரா, கர்னால், அசாந்த், பானிபட், கோஹானா, கன்னார், ரோஹ்தக், கார்கோடா, பிவானி, சர்க்கி தாத்ரி, ஜஜ்ஜார் மற்றும் கோஸ்ஸாவின் பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மற்றும் ஹரியானாவில் சில பகுதிகளிலும் மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதையடுத்து, இன்று டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். அதேநேரத்தில் டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலையாக 28.7 டிகிரி செல்சியஸில் பதிவாகியுள்ளது. இது பருவத்தின் சராசரியைவிட 8 புள்ளிகள் குறைவாக உள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக பதிவாகி உள்ளது. இது பருவத்தின் சராசரியைவிட 3 புள்ளிகள் குறைவாகும்.

டெல்லியில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்களும் அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். கனமழையால் டெல்லியின் ஜாகிரா பகுதியில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.

கனமழையால் டெல்லி திணறி வரும் நிலையில் அனைத்து துறை ஊழியர்களின் விடுமுறையை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ரத்து செய்து, உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டுள்ளார்.

delhi ani

இதுதவிர, இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

இமாச்சல் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் இன்றும் மிக அதிக கனமழை பெய்யும் எனத் தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், இவ்விரு மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.