delhi farmers protest
delhi farmers protest twitter
இந்தியா

டெல்லி சலோ: ஜேசிபி, கிரேன்களைக் கொண்டுவந்த விவசாயிகள்.. ஷம்பு எல்லையில் தொடரும் பதற்றம்!

கணபதி சுப்ரமணியம்

பஞ்சாப் - ஹரியானா எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் ஜேசிபி மற்றும் கிரேன் உள்ளிட்ட கனரக இயந்திரங்களை ஷம்பு எல்லைக்குக் கொண்டுவந்துள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது. இந்த எல்லைப் பகுதியில் 14 ஆயிரம் விவசாயச் சங்க ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர் என ஹரியானா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 1,200 டிராக்டர்கள் ஏற்கெனவே விவசாயிகள் முகாமிட்டுள்ள இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஷம்பு எல்லையில் தடுப்புகளை உருவாக்கி ஹரியானா காவல்துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவப் படைகள் விவசாயிகள் பேரணி ஹரியானா மாநிலத்துக்குள் நுழையாதபடி தடுத்து நிறுத்தி உள்ளனர். இந்நிலையில் மத்திய அரசுடன் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்திவந்ததால், ஷம்பு எல்லையில் பதற்றம் தணிந்திருந்தது.

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், புதன்கிழமை காலை 11 மணி முதல் தங்களுடைய டிராக்டர் பேரணியை மீண்டும் தொடங்கி டெல்லியை முற்றுகையிடப் போவதாக விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஆகவே ஷம்பு எல்லையில் பாதுகாப்பு மேலும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

ஜேசிபி மற்றும் கிரேன் இயந்திரங்கள் மூலம் ஷம்பு எல்லையில் உள்ள தடுப்புகளைத் தகர்க்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் கூடுதல் துணை ராணுவப் படைகள் அருகாமையில் உள்ள பகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ளன.

சென்ற வாரம் ஷம்பு எல்லையைக் கடக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் முயற்சி செய்தபோது, ட்ரோன்கள் மூலம் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசி அவர்களைத் தடுக்க காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படைகள் நடவடிக்கை எடுத்தன. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், தங்களை ஹரியானா வழியாக டெல்லிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

ஷம்பு எல்லையில் குவிந்துள்ள 14,000 நபர்களில் பல சமூக விரோத சக்திகள் உள்ளதாகவும், பலரிடம் வாள்கள், ஈட்டிகள் மற்றும் இரும்பு தடிகள் உள்ளதாகவும் இதனால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் ஹரியானா காவல்துறையினர் எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினருக்கு தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே ஹரியானா காவல்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் ஷம்பு எல்லையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.