தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் பிப்ரவரி 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து அங்கு தேர்தல் களம் சூடுபிடித்திருப்பதுடன், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளிடம் போட்டி நிலவுகிறது. தவிர, ஒவ்வொரு கட்சிகளும் இதர கட்சிகளைக் குறைகூறி வருவதுடன், மறுபக்கம் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அதிலும் காங்கிரஸும், பாஜகவும் ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது கடுமையாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. அதில், முக்கியமானதாக யமுனை நதி நீரில் விஷம் கலக்கப்பட்டதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தது விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்னும் தேர்தலுக்கு 5 நாட்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் 6 எம்எல்ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இந்தத் தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்த நரேஷ் யாதவ் (மெக்ராலி), ரோஹித் குமார் (திரிலோக்புரி), ராஜேஷ் ரிஷி (ஜனக்புரி), மதன் லால் (கஸ்தூர்பா நகர்), பவன் சர்மா (ஆதர்ஷ் நகர்), பாவனா கவுட் (பாலம்) என 6 பேர் தற்போது ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக, பி.எஸ்.ஜூன் (பிஜ்வாசன்) ராஜினாமா செய்திருந்தார். இது, ஆம் ஆத்மி கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நரேஷ் யாதவ், "நேர்மையான அரசியல் என்ற அடிப்படை கொள்கையை ஆம் ஆத்மி கைவிட்டுள்ளது" எனக் குற்றம்சாட்டியுளார்.