இந்தியா

புதிய மதுபான கொள்கை மோசடி புகார்: சிபிஐ அலுவலகத்தில் மணீஷ் சிசோடியா நேரில் ஆஜர்

webteam

புதிய மதுபான கொள்கை மோசடி தொடர்பாக, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில்  நேரில் ஆஜரானார்.

மதுபானக்கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த  மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பா.ஜ.க.அரசு செயல்பட்டு வருகிறது என்றும், சிபிஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக எந்த நேரத்திலும் மணீஷ் சிசோடியா கைது செய்யப்படலாம் என, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் மணீஷ் சிசோடியா ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக அவர் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்றிருந்தார்.