இந்தியா

சாலையோர வியாபாரியிடம் மாம்பழங்களைக் கொள்ளையடித்த கும்பல் - ஊரடங்கு அவலம்

webteam
பழ வியாபாரியிடம் உள்ள மாம்பழங்களை ஒரு கும்பல் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
கொரோனா நோய்த் தொற்று காரணமாக நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நான்காவது முறையாக நீடிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகமாக வெளியே நடமாடாமல் இருக்க சில கட்டுப்பாடுகளும், சில விதிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளனர்.
 
 
இதனிடையே நாடு முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. முறையாகக் காய்கறிகள் விநியோகம் நடக்கவில்லை என்றும் பற்றாக்குறை உள்ளதாகவும் மக்கள் புகார் கூறி வருகின்றன. ஆகவே அதனைச் சரி செய்ய அரசு பல கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறது.
 
 
இந்நிலையில் நாட்டின் தலை நகரான டெல்லியில் சாலை வியாபாரியிடம் இருந்த மாம்பழத்தை மக்கள் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வடக்கு டெல்லியிலுள்ள ஜகத்புரி பகுதியில் சாலையோரமாக ஒருவர் மாம்பழக் கடை போட்டு விற்பனை செய்து வந்துள்ளார். நெருக்கடி மிகுந்த பகுதி என்பதால் அவர் வியாபாரம் நன்றாக நடைபெறும் என எதிர்பார்த்துக் காத்திருந்துள்ளார். ஆனால் அந்த வியாபாரிக்குக் கிடைத்ததோ பெரிய தர்ம அடிதான். 
 
 
நாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால் அவரிடம் பழம் வாங்க வந்த சில சண்டையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அதனையடுத்து சாலையோர பழக்கடைகாரர் வைத்திருந்த பழங்களை ஆளுக்குக் கொஞ்சமாகக் கொள்ளையடித்துக் கொண்டு போக ஆரம்பித்துள்ளனர். பொது மக்களின் இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வியாபாரி, அதனைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் வந்தவர்கள் தங்களின் இருசக்கர வண்டியில் தலைக்கவசத்திற்குள்ளாகவும் அள்ளிப் போட்டுக் கொண்டு சென்றுள்ளனர். அது தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதைக் கண்ட நெட்டிசன்கள் அதிர்ந்து போய் கருத்துக் கூறி வருகின்றனர்.
 
 
இது குறித்துப் பாதிக்கப்பட்ட வியாபாரி சோட்டோ கூறுகையில்,  “ஒரு கும்பல் இந்தப் பகுதியில் உள்ள பள்ளி அருகே சண்டைபோட்டுக் கொண்டது. அவர்கள் என் கடைப் பக்கம் வந்தனர். என் வண்டியை நகர்த்தச் சொன்னார்கள்.  என்னையும் தாக்கினர்.  என்னிடம் சுமார் ரூ .30,000 மதிப்புள்ள 15 கிரேடு மாம்பழங்கள் இருந்தன. அவை அனைத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு சென்றுவிட்டனர். காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன். ஆனால் அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவே இல்லை” என்று கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியை என்டிடிவி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.