இந்தியா

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - அச்சத்தில் மக்கள்!

JustinDurai

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 3.95 சதவீதமாக உள்ளது.

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20,07,970 ஆக உயர்ந்துள்ளது. 26,523 பேர் உயிரிழந்திருக்கின்றனர். தற்போது டெல்லியில் 209 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதம் குறைவாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி டெல்லியில் கொரோனா தொற்று விகிதம் 3.95 சதவீதமாக உள்ளது.

நாட்டில் ஏற்கனவே எச்3என்2 காய்ச்சல் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் டெல்லியில் மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் தீவிர கண்காணிப்பு, தடுப்பு நடவடிக்கைகளை அம்மாநில அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், ''காய்ச்சல் பரவுவதை கண்காணித்து வருகிறோம். மாவட்ட கண்காணிப்பு பிரிவுகள், சுகாதார வசதிகள் மற்றும் அரசு மருத்துவமனைகள் அதிகாரிகளுக்கு, தினமும் நிலைமையை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.  

சளி, இருமல், அதிக காய்ச்சல், உடல் வலி, தலை வலி, தும்மல், மூக்கு அடைப்பு, தொண்டை புண், கண்களில் நீர் வடிதல், ஆகியவை எச்3என்2 காய்ச்சலின்  அறிகுறிகள் என்றும் இந்த காய்ச்சலுக்கு அசித்ரோமைசின் உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.