இந்தியா

டெல்லியில் இளம் வயதினரை குறிவைக்கும் கொரோனா: எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்

JustinDurai

டெல்லியில் இளம்வயதினரை கொரோனா பரவல் அதிக அளவில் தொற்றியுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. டெல்லியில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, தற்போது தினமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,904 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா கூறுகையில், ‘’டெல்லியில் கொரோனா பரவல் இளம் வயதினரை அதிக அளவில் தொற்றியுள்ளது. இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில் தொற்று அவர்கள் மூலம் வயதானவர்களுக்கு பரவக்கூடும். அது தீவிர அறிகுறிகளை தூண்டக்கூடும். இது கொரோனாவுக்கு எதிரான போரை கடினமாக்கும்.

மீண்டும் லாக்டவுனை அமல்படுத்துவது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது. அதேநேரத்தில், ஒரு நகரத்திற்குள் அதிகமான கட்டுப்பாட்டு பகுதிகளைக் கொண்டிருப்பது பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஒரு சிறந்த உத்தியாக இருக்கும். அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனைகளை கணிசமாக அதிகரிக்க வேண்டும். கொத்துக் கொத்தாக பாதிப்பு ஏற்படும் மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ‘ரேபிட் ஆன்டிஜென்’ பரிசோதனை நடத்தப்பட வேண்டும்’’ என்றார்.