இந்தியா

மின்வெட்டு வந்தால் 5 ஆயிரம் வரை இழப்பீடு: டெல்லி அசத்தல்!

மின்வெட்டு வந்தால் 5 ஆயிரம் வரை இழப்பீடு: டெல்லி அசத்தல்!

Rasus

முன்அறிவிப்பில்லாத மின்வெட்டு ஏற்படும் பட்சத்தில் அதற்கு இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

மின்சாரம் என்பது தினசரி தேவைகளில் ஒன்று. தொழில் நிறுவனங்களில் மின்வெட்டு இருக்கும்பட்சத்தில் வருவாய் குறையும். வளர்ச்சியும் குறையும். வீடுகளில் மின்வெட்டு இருந்தாலும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகுவார்கள். எனவே தடையில்லா மின்சாரம் வழங்க அனைத்து மாநில அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில் முன் அறிவிப்பில்லாத மின்வெட்டு இருக்கும்பட்சத்தில் அதற்கு இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

அதன்படி 1 ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 50 இழப்பீடு வழங்கப்படும். இதுவே இரண்டு மணி நேரத்தை தாண்டி மின்வெட்டு இருக்கும்பட்சத்தில் அதன்பின் 1 மணி நேரத்திற்கு ரூபாய் 100 இழப்பீடு வழங்கப்படும். அதாவது முதல் இரண்டு மணி நேர மின் வெட்டிற்கு 1 மணி நேர கால அளவிற்கு 50 ரூபாய் என்ற அடிப்படையிலும், அதன்பின் 1 மணி நேரத்திற்கு ரூபாய் 100 என்ற அடிப்படையிலும் இழப்பீடு வழங்கப்படும். 

அதிகப்பட்சமாக ரூபாய் 5000 வரையில் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இத்திட்டத்தை அமல்படுத்த ஆலோசனை நடத்தப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் இத்திட்டம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இதற்கேற்ப விதிகளையும் மாற்றி அமைத்துள்ளது. டெல்லி துணை நிலை ஆளுநர் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

முன்னதாக இதே திட்டத்தை ஏற்கெனவே ஆம் ஆத்மி கட்சி அறிவித்திருந்தது. ஆனால் அதில் முறையான கையொப்பம் இல்லாத காரணத்தினால் அந்தத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மின்வெட்டிற்கு இழப்பீடு திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், நாட்டிலேயே முதல் மாநிலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டிற்கு டெல்லி அரசு இழப்பீடு வழங்குகிறது எனத் தெரிவித்துள்ளது. மின்வெட்டு வந்தால் இனி இழப்பீடாவது வரும் என டெல்லி மக்கள் ஓரளவிற்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.