இந்தியா

"நிலைமை மோசமாக உள்ளது; நாட்டையும் மக்களையும் காப்பாத்தணும்"- டெல்லி முதல்வர் தியானம்

webteam

நாட்டின் நிலைமை மோசமாக உள்ளது எனக்கூறி, நாட்டை காப்பாற்ற 7 மணி நேர தியானத்தை தொடங்கி உள்ளார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்.

நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களும், நாடும் தீயவர்களிடமிருந்து காப்பாற்றப்பட வேண்டும் எனக் கூறி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னதாக, டெல்லி ராஜ் காட்டில் உள்ள காந்தி நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார் அரவிந்த் கெஜ்ரிவால். அதன்பின் தான் 7 மணி நேர தியானத்தை தொடங்கினார்.

இதுபற்றி அவர் தெரிவிக்கையில், “முன்னேற்றம் அடையாமல் உள்ள இந்நாட்டில் மருத்துவமனையையும் கல்வி நிலையங்களையும் மேம்படுத்தியவர்களை தீயவர்கள் எனக்கூறி சிறையில் அடைத்து விட்டனர். நாட்டு மக்களுக்காக உழைக்க யாரும் இல்லாத இந்நேரத்தில் நாட்டு மக்களுக்காக கவலைப்பட வேண்டும். அதனால் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற தியானிக்கிறேன்” என்று கூறி தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.