இந்தியா

வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்க விரும்பினால் மத்திய அரசு தடுப்பது ஏன்?-கெஜ்ரிவால்

EllusamyKarthik

பீட்சா, பர்கர் உள்ளிட்டவைகளை டோர் டெலிவரி செய்யும்போது ரேஷன் பொருட்களை நாங்கள் வீடுகளுக்கே சென்று வழங்க விரும்பினால் அதனை மத்திய அரசு தடுப்பது ஏன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டத்திற்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் இருப்பது நீண்டகால சர்ச்சையாக இருந்து வருகிறது.

இந்த விவகாரத்தை தற்பொழுது மீண்டும் கையில் எடுத்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா காலம் என்பதால் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்களை வழங்க தங்கள் அரசு முயற்சித்து வருவதாகவும் ஆனால் அதற்கு துணைநிலை ஆளுநர் அனுமதி அளிக்காமல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ரேஷன் கடைகள் மூலம் கொரோனா பரவும் வாய்ப்பு இருப்பதால் இந்த திட்டத்தை முன்னெடுக்க அனுமதிகோரி ஐந்து முறைக்கு மேல் துணைநிலை ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாகவும் ஆனால் அது குறித்து இன்னும் அவர் எந்த ஒரு முடிவையும் எடுக்காமல் இருப்பதாகவும் கூறியுள்ளார். உடனடியாக இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பீட்சா, பர்கர், துணி வகைகள், செல்போன்கள் உள்ளிட்டவை எல்லாம் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் பொழுது ரேஷன் பொருட்களை ஏன் வழங்கக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.