மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டுள்ளனர். டெல்லியை ஸ்தம்பிக்க வைத்துள்ள இந்த போராட்டத்தினை எப்படி அணுகுகிறது மத்திய அரசு?
விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்கள் என்ன?
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.
இந்த சட்டங்கள் மூலமாக விவசாயம் முழுமையும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பிடிக்குள் செல்லும் என்றும், குறைந்த பட்ச ஆதாரவிலை என்பதே இல்லாமல் போகும் என்றும், படிப்படியாக அரசின் விவசாய விளைபொருள் கொள்முதல் நிலையங்கள் மூடப்படும் என்றும் ஆரம்பம் முதலே விவசாயிகளும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. கடும் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசு இந்த மூன்று வேளாண் பண்ணைய சட்டங்களை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றியது, இதனால் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். மற்ற மாநிலங்களை விடவும் வீரியமான போராட்டங்களை பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் செய்துவருகின்றனர்.
இச்சட்டங்களால் ஏற்படும் பாதகங்கள் என்ன?
இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இப்போது வந்துள்ள அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை விதிப்பதில் பல்வேறு சிக்கல்கள் எழும். அடுத்ததாக விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டத்தின் மூலமாக விவசாய விளை பொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும் வர்த்தகமும் செய்ய வழிவகுக்கிறது.
இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு வெளியிலும் பொருட்களை விற்க வழிசெய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது. ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசு கொண்டிருக்கும் கட்டுப்பாடு இந்தச் சட்டத்தின் மூலம் இல்லாமல் போகிறது. மேலும் குறைந்த பட்ச ஆதாரவிலை நிர்ணயம் என்பதும் இல்லாமல் போகும். வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு விளைபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது.
விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 மூலமாக விவசாயிகளுடன் எந்த ஒரு மூன்றாவது நபரும் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம். இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசின் பட்டியலின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மேலும், பெரிய விதை நிறுவனங்கள், கான்ட்ராக்ட் விவசாய நிறுவனங்கள், மிகப் பெரிய சங்கிலித் தொடர் சூப்பர் மார்க்கெட்களுக்கு ஏதுவாக இந்தச் சட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ராஜஸ்தான் மாநில அரசுகள் சட்டமன்றத்தில் சட்டமசோதாக்களை நிறைவேற்றியுள்ளன.
பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் கொந்தளிப்பு தொடர்வது ஏன்?
நாட்டிலேயே வேளாண்மையை பிரதானமாக கொண்ட மாநிலங்களில் முக்கியமானவை பஞ்சாப் மற்றும் ஹரியானா. விவசாயத்தை போலவே கால்நடை பண்ணைகளும் இம்மாநிலத்தில் அதிகம் உள்ளது. எனவே இம்மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு இயற்றியது முதலே பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த போராட்டங்களால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இம்மாநிலங்களில் ரயில் போக்குவரத்து, சாலை போக்குவரத்து போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் இம்மாநிலத்தை பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் அதிரடியாக “டெல்லி சலோ” என்ற போராட்டத்தை அறிவித்து டெல்லியின் எல்லையில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைப்பகுதிகள் முற்றிலும் ஸ்தம்பித்து நிற்கிறது. தற்போது இப்போராட்டத்தில் ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் பெருமளவில் கலந்துகொண்டுள்ளனர், உத்தரபிரதேச மாநில விவசாயிகளும் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிடத் தொடங்கியுள்ளனர்.
விவசாயிகள் முற்றுகைக்கு மத்திய அரசின் ரியாக்சன் என்ன?
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் முயற்சியில் நடக்கும் இந்த போராட்டத்தை தடுக்க மத்திய அரசு ஆரம்பம் முதலே தீவிரம் காட்டி வருகின்றது. ஆனால் பஞ்சாபின் காங்கிரஸ் அரசும், டெல்லி ஆம் ஆத்மி அரசும் இந்த போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மத்திய அரசு கலக்கத்தில் உள்ளது. இருந்தபோதும் டெல்லி எல்லையில் குவியும் விவசாயிகளை தடுக்க தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகைகுண்டுகள் வீசியும் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. ஆனாலும் விவசாயிகள் தடுப்புகளை மீறியும் முன்னேறி எல்லையில் தொடர் முற்றுகையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த சூழலில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கத்துக்கும் தொடர்பு உள்ளது என்று ஹரியானா பாஜக அரசின் முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்தார். அதுபோலவே பாஜகவின் சில முக்கிய தலைவர்களும் இந்த போராட்டத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். எனினும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் தயாராக இருக்கிறோம் ஆனால் அவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சென்று போராட்டம் நடத்தினால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் இந்த நிபந்தனை விவசாயிகளை மேலும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. நிபந்தனையுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பது சரியான அணுகுமுறை இல்லை என்று போராட்டக்குழு தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் வீரியமடைந்துவரும் இந்த போராட்டத்தின் கோரிக்கையை ஏற்று இந்த மூன்று சட்டங்களில் திருத்தம் கொண்டுவருமா அல்லது எதுபோன்ற நடவடிக்கையை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-வீரமணி சுந்தரசோழன்